Tuesday, February 12, 2013

டிஜிட்டல் கியூப்பில் மாற்றும் பணி முடிந்தது: வசந்த மாளிகை 80 தியேட்டரில் ரிலீஸ்


சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ ஜோடியாக நடித்து 1972-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் வசந்த மாளிகை. கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கினார்.

இந்த படம் டிஜிட்டல் கியூப்பில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீசாகிறது. தமிழகம் முழுவதும் 80 தியேட்டர்களில் மார்ச் 1-ந்தேதி திரையிடப்படுகிறது.

வசந்த மாளிகை பிரிண்ட்கள் 'கியூப்' தொழில் நுட்பத்தில் மாற்றப்பட்டு உள்ளன. இதன்மூலம் அனைத்து திரையரங்குகளிலும் ஒரே நேரத்தில் காட்சிகள் திரையிடப்படும். அத்துடன் ஒலி அமைப்புகள் துல்லியமாக கேட்கும் வகையில் டிஜிட்டல் தொழில் நுட்பமும் புகுத்தப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் செலவில் இப்பணிகள் நடந்து முடிந்துள்ளன.

சிவாஜி நடித்த படங்களில் வசந்த மாளிகை சிறந்த காதல் காவிய படைப்பாக கருதப்பட்டது. இப்படத்தில் இடம்பெறும் மயக்கம் என்ன உந்தன் மவுனம் என்ன, யாருக்காக இது யாருக்காக, இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன், கலைமகள் கைப்பொருளே, ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் ஏன் ஏன், குடிமகனே பெரும் குடிமகனே போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் கலக்கின.

இந்த படம் 13 இடங்களில் 100 நாட்களை தாண்டி ஓடியது. மதுரை நியூ சினிமாவில் 200 நாட்களும், சென்னை சாந்தியில் 176 நாட்களும் ஓடியது.

திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மாயவரத்தில் நடந்த இதன் 100-வது நாள் விழாவில் சிவாஜி கணேசன், சுந்தரராஜன், சி.ஐ.டி.சகுந்தலா, குமாரி, பத்மினி ஆகியோர் ஒரே நாளில் பங்கேற்றனர். அப்போது இவ்வூர்களில் சிவாஜிக்கு வழிநெடுக ரசிகர்கள் திரண்டு அமோக வரவேற்பு அளித்தனர்.

கப்பலோட்டிய தமிழன், கர்ணன் போன்று சிவாஜி ரிஸ்க் எடுத்து நடிக்காத இப்படம் வெற்றிகரமாக ஓடியது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது.

No comments: