Saturday, February 23, 2013

இந்தியன் முஜாகிதீன்களுக்குத் தொடர்பு


ஹைதராபாதில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகள்தான் காரணம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ள "சிமி' (இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்) அமைப்பினர்தான் இப்போது இந்தியன் முஜாகிதீன் என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றனர்.



ஹைதராபாதில் வெடித்த குண்டுகள் இரண்டுமே அதிகசக்தி வாய்ந்த ஐஇடி வகையைச் சேர்ந்தவை. உயிரிழப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்பதே பயங்கரவாதிகளின் நோக்கமாக இருந்துள்ளது. இரு குண்டுகளுமே சைக்கிளில்தான் வைக்கப்பட்டுள்ளன. வெடிகுண்டுகளிலும் "அம்மோனியம் நைட்ரேட்' வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2007-ம் ஆண்டில் இதே பயங்கரவாத அமைப்பு இங்கு நடத்திய தாக்குதலுடன் இது ஒத்துப் போகிறது. மேலும் முந்தைய தாக்குதலில் ஏற்பட்டது போன்ற காயங்கள் இப்போது மருத்துவமனைகளில் உள்ளவர்களுக்கும் ஏற்பட்டுள்ளதை தடயவியல் துறை உறுதிப்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் உடல்களில் இருந்து இரும்பு "போல்ட்', ஆணிகள், கண்ணாடித் துண்டுகள், உள்ளிட்டவைகள் இருந்துள்ளன. இவை அனைத்தும் வெடிகுண்டுகளில் இருந்தவையாகும்.



உளவு பார்த்த பயங்கரவாதிகள்: புணேயில் கடந்த ஆண்டு இந்தியன் முஜாகிதீன் நடத்திய குண்டு வெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சையீத் மக்போல், இம்ரான் கான் ஆகியோரை தில்லி போலீஸôர் ஏற்கெனவே கைது செய்துள்ளனர்.



அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது இப்போது குண்டு வெடித்த ஹைதராபாதின் தில்சுக் நகர் உள்ளிட்ட மூன்று பகுதிகளில் தாங்கள் ஏற்கெனவே சென்று உளவு பார்த்ததாக கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

No comments: