Saturday, February 23, 2013

கிரானைட் முறைகேடு: ஆட்சியரின் நோட்டீஸýக்கு உயர் நீதிமன்றம் தடை

சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்தது குறித்து, மாவட்ட ஆட்சியர் அளித்த நோட்டீஸýக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை புதன்கிழமை தடை விதித்துள்ளது.




சிந்து கிரானைட் நிறுவன உரிமையாளர் பி.கே.செல்வராஜ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், எஸ்.விமலா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.



அவரது மனு விவரம்:



மதுரை ஆட்சியர் ஜன.28-ல் அளித்துள்ள நோட்டீஸில், எங்களது நிறுவனம் ரூ.266.15 கோடி மதிப்பிலான 66,538 கன மீட்டர் கிரானைட் கற்களை சட்ட விரோதமாக வெட்டி எடுத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பிப்.21 மாலை 6 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதேபோல, 2010 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் எங்களது நிறுவனத்துக்கு 3 நோட்டீஸ்கள் ஆட்சியரால் அளிக்கப்பட்டன. அவற்றில், மொத்தம் 1,489 கன மீட்டர் அளவுக்கு சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆதாரப்பூர்வமற்ற இந்த நோட்டீஸ்களை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம் மனுக்களின் இறுதி விசாரணையின்போது, மேற்குறிப்பிட்ட 3 நோட்டீஸ்களையும் திரும்பப் பெறுவதாகவும், சட்ட விதிகளின்படி புதிதாக நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மனுக்கள் மீதான விசாரணை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.



இந்த நிலையில், அதேபோன்ற நோட்டீஸ் தற்போது ஆட்சியரால் அளிக்கப்பட்டுள்ளது. முந்தைய 3 நோட்டீஸ்களிலும் மொத்தம் 1,489 கன மீட்டர் அளவுக்கு சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றில் கடைசி நோட்டீஸ் 2012 மே மாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அளிக்கப்பட்டிருக்கும் நோட்டீஸில் 66 ஆயிரத்து 538 கன மீட்டர் கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுத்திருப்பதாகக் குறிப்பிட்டிருப்பது ஏற்புடையதாக இல்லை.



முந்தைய ஆட்சியர் உ.சகாயம் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில், மதுரை மாவட்டத்தில் ரூ.16 ஆயிரம் கோடி கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். அந்த அறிக்கை எவ்வித ஆதாரமும், ஆவணமும் இன்றி கற்பனையாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையை உறுதிப்படுத்துவதற்காக தற்போதைய ஆட்சியரால் இதுபோன்ற நோட்டீஸ்கள் அனைத்து குவாரி உரிமதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த நோட்டீஸýக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.



இம் மனுவை விசாரித்த நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், எஸ்.விமலா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டிய மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்குத் தடை விதித்தனர். மேலும், இம் மனு மீதான இறுதி விசாரணை முடியும் வரை, மேற்குறிப்பிட்ட நோட்டீஸ் மீது எவ்வித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர். விசாரணையை மார்ச் 6}க்கு ஒத்தி வைத்தனர்.

.

No comments: