சசிகலாவின் அக்காள் மகன் சுதாகரன் மீது அவரது உதவியாளர் கோகுல் ஸ்ரீதர் போலீசில் புகார் செய்தார். சுதாகரன் துப்பாக்கியை காட்டி தன்னை கொலை செய்ய முயன்றதாக கூறியிருந்தார்.
இதுகுறித்து பாண்டி பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து தி.நகரில் உள்ள சுதாகரன் வீட்டிலும், ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 88 கிராம் ஹெராயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சுதாகரன் அவரது நண்பர்கள் மொய்னுதீன், சகாபுதீன், பாஸ்கரன் ஆகியோர் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னையில் உள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் முதன்மை சிறப்பு செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இதில் கைதாகி ஜாமீனில் வெளியில் வந்த சகாபுதீன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து சுதாகரன், மொய்னுதீன், பாஸ்கரன் ஆகியோர் மீதான வழக்கு மட்டும் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி டி.ராமமூர்த்தி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
அப்போது அவருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்தது. எனவே, இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கை நீதிபதி சின்னப்பன் விசாரித்து கடந்த வாரம் தீர்ப்பை தள்ளி வைத்தார்.
இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி சின்னப்பன் பிறப்பித்தார். அப்போது கோர்ட்டில் குற்றம்சாட்டப்பட்ட சுதாகரன், மொய்ணுதீன், பாஸ்கரன் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.
அப்போது, அவர்களை பார்த்து நீதிபதி, ''உங்கள் 3 பேர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கில் இருந்து உங்களை விடுதலை செய்கிறேன்'' என்று கூறினார்.
அதை தொடர்ந்து 3 பேரும் கோர்ட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தாமல் கன்னா ஆஜரானார்.
No comments:
Post a Comment