மதுரை : ""மதுரை தூத்துக்குடி ரோடு, அனுப்பானடியில் உள்ள வேலம்மாள் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், ஏழைகளுக்கு இலவச சேவை அளிக்கப்படும்,'' என, அதன் தலைவர் முத்துராமலிங்கம் தெரிவித்தார்.
மருத்துவமனை வசதிகள் குறித்து, அவர் கூறியதாவது: 39 ஏக்கர் பரப்பளவில், ரூ.550 கோடி மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன், இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரியோடு இணைந்த மருத்துவமனையாக செயல்படும் போது, நோயாளிகள் எண்ணிக்கை அதிகளவில் இருந்தால்தான், மருத்துவ மாணவர்கள் முழுமையாக பயிற்சி பெற முடியும். எனவே, மருத்துவமனையை இரண்டு பகுதிகளாக பிரித்துள்ளோம். ஒருபகுதியில் 900 படுக்கைகளுடன் ஏழைகளுக்கான இலவச சிகிச்சை, இலவச உணவு, இலவச படுக்கை வசதி, மகப்பேறு வசதி அமைக்கப்பட்டுள்ளது. ரூ.3க்கு கீழுள்ள மாத்திரைகள் இலவசமாக தரப்படுகிறது.
இதன் மூலம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். நோய்களைப் பற்றி, மாணவர்கள் முழுமையாக தெரிந்து கொண்டு பயில முடியும். தற்போது தினமும் ஆயிரம் வெளிநோயாளிகளும், 200 உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். அனைவருக்குமே மருத்துவ ஆலோசனை கட்டணம் இலவசம். மற்றபடி, வசதி வேண்டுவோருக்கு ஆயிரம் படுக்கை வசதிகளுடன், கட்டணத்துடன் கூடிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், எலும்பு மூட்டு மாற்று, முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை அனைத்திற்கும் பாதி கட்டணம். வசதியற்றவர்கள் 40 - 50 பேருக்கு, தினமும் சிறு அறுவை சிகிச்சை கட்டணமின்றி செய்யப்படுகிறது. மதுரை அரசு மருத்துவமனையைப் போல, கட்டணமின்றி செய்யப்படும் சேவையை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.தற்போது அவசர சிகிச்சைப் பிரிவு, எலும்புப் பிரிவு, மகப்பேறு, கண், காது, மூக்கு, தொண்டை, குழந்தைகள் நலம், மனநோய் பிரிவுகள் முழுமையாக செயல்படுகின்றன. ரத்தவங்கியும் உள்ளது. இருதய நோய்ப் பிரிவிற்கான பணிகள் நடந்து வருகின்றன. மருத்துவக் கல்லூரியில், இந்தாண்டில் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு 150 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் "பேட்ச்' முடிந்தபின், முதுநிலை படிப்பு துவங்கப்படும். அடுத்தாண்டு நர்சிங் கல்லூரி துவங்க திட்டமிட்பட்டுள்ளது. விரைவில் பாராமெடிக்கல், பல் மருத்துவக் கல்லூரிகளும் திறக்கப்படும், என்றார்.டீன் சீனிவாசன், கண்காணிப்பாளர் ராமதாஸ் சடயா, துணை கண்காணிப்பாளர் ரவிராமன் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment