இலங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற வடக்கு மாகாண கவுன்சில் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (டி.என்.ஏ.) மொத்தம் உள்ள 38 இடங்களில் 30 இடங்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று, வரலாறு படைத்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் அதிபர் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்டணி (யு.பி.எஃப்.ஏ.) 7 இடங்களையும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி (எஸ்.எம்.சி.) ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
கூட்டாட்சி: வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதல்வராக சி.வி. விக்னேஸ்வரன் (73) பதவியேற்க உள்ளார். இவர் இலங்கை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆவார்.
எதிர்பார்த்த வெற்றி: வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான் என்று இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கெகலிய ரம்புக்வெல்லா கூறினார். ""இந்த வாய்ப்பை அவர்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்படாது. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் செயல்பட வேண்டும். தேவைப்பட்டால் அரசியலமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளலாம்'' என்றார் ரம்புக்வெல்லா.
அபார வெற்றி: இலங்கையின் வடக்குப் பகுதியில் போர் முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. வடக்கு மாகாணத்துக்கு உள்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மொத்தம் 78.48 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. எதிர்த்துப் போட்டியிட்ட அதிபர் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு வெறும் 18.38 சதவீதம் வாக்குகளே கிடைத்தன.
யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் பதிவான வாக்குகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றது. முல்லைத் தீவில் 78 சதவீதம் வாக்குகளும், மன்னார் மாவட்டங்களில் 61 சதவீத வாக்குகளும் அக்கட்சிக்குக் கிடைத்தது. தமிழர்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தலைநகரமாக திகழ்ந்த யாழ்ப்பாணத்தில் மட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 85 சதவீத வாக்குகள் கிடைத்தன.
மொத்தமுள்ள 38 இடங்களில், 36 இடங்களுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. இலங்கை சட்டத்தின்படி வெற்றி பெறும் கட்சிக்கு 2 இடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அதன்படி, தமிழ் அரசுக் கட்சிக்கு மேலும் இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன.
ராஜபட்ச கூட்டணி வெற்றி: இலங்கையின் மத்திய, வடமேற்கு மாகாணங்களில் அதிபர் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மத்திய மாகாணத்துக்கு உள்பட்ட கண்டி, மாத்தளை, நுவரேலியா மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 34 இடங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய தேசியக் கட்சி 12 இடங்களைப் பிடித்தது.
வடமேற்கு மாகாணத்துக்கு உள்பட்ட புத்தளம், குருநாகல் மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 36 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 16 இடங்களையும் கைப்பற்றியது. இந்தப் பகுதிகளில் தமிழ்க் கட்சிகள் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தெளிவான முடிவு: தேர்தலில் மக்கள் தெளிவான முடிவை வழங்கியுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். ""தமிழர்களின் அரசியல் தலைமையை நிலைநாட்ட இது சரியான தருணம் என்று மக்களிடம் கூறினோம். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து மக்கள் அதை நிரூபித்துவிட்டனர்'' என்று அவர் தெரிவித்தார்.
அரசியல் தீர்வு: நாட்டைப் பிரிக்காமல் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை இலங்கை அரசுக்கு வடக்கு மாகாண மக்கள் இந்த தேர்தல் முடிவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த எம்.பி.யான சுரேஷ் பிரேமசந்திரன் கூறினார்.
வடக்கு மாகாணம் மாவட்டங்கள்
(டி.என்.ஏ.) (யு.பி.எஃப்.ஏ.) (எஸ்.எம்.சி.)
யாழ்ப்பாணம் 14 2 -
கிளிநொச்சி 3 1 -
மன்னார் 3 1 1
வவுனியா 4 2 -
முல்லைத்தீவு 4 1 -
.
No comments:
Post a Comment