மதுரை அருகே லாரி மோதி பயங்கர விபத்து:
ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 4 வாலிபர்கள் பலி
சாலைபாதுகாப்பு வாரவிழாவில் சோகம்
உசிலம்பட்டி, ஜன.20-
ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேர் மணல் லாரி மோதி தூக்கி வீசப்பட்டு பலியான சம்பவம் செக்கானூரணி அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நண்பர்கள்
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள மேலக்கால் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆறுமுகம் மகன் பாலகார்த்திக் (வயது 18), தேவர் மகன் ராஜகுரு (22), செல்வம் மகன் விஜயகுமார் (24). உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரை சேர்ந்த முத்தையா மகன் முத்துக்குமார். (25). நண்பர்களான இவர்கள் மதுரையில் உள்ள பேக்கரி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தனர்.
நேற்று மேலக்கால் அருகே உள்ள கச்சிராபட்டியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். அதன்பின்னர் முத்துக்குமாரை தொட்டப்பநாயக்கனூருக்கு பஸ் ஏற்றி விடுவதற்காக அவர்கள் அதே மோட்டார் சைக்கிளில் செக்கானூரணிக்கு வந்து கொண்டு இருந்தனர்.
பயங்கரம்
மோட்டார் சைக்கிளை ராஜகுரு ஓட்டி வந்தார். செக்கானூரணியை அவர்கள் நெருங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது திருமங்கலம் பகுதியிலிருந்து கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி, இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 பேர் தூக்கி வீசப்பட்டனர். மற்ற 2 பேர் மோட்டார் சைக்கிளுடன் 50 அடி தூரம் இழுத்துச்செல்லப்பட்டனர்.
இதில் பாலகார்த்திக், ராஜகுரு, விஜயகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகிய 4 பேரும் அந்த இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார்கள். லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் செக்கானூரணி போலீசார் விரைந்து சென்று 4 பேர் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) துரைசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து இறந்த 4 பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
டிரைவர் கைது
சம்பவம் குறித்து அறிந்ததும் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர் கூறுகையில் விபத்து நடந்த இடம் அபாயகரமான பகுதி இல்லை. விபத்துக்கு காரணமான லாரி டிரைவரான சின்னனன்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரது மகன் மகாராஜன் (43) என்பவரை கைது செய்துள்ளோம். லாரியில் கிராவல் மண் கொண்டு வர அனுமதி பெறப்பட்டு இருந்ததா? என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
சாலை பாதுகாப்பு வார விழா
தமிழகத்தில் சாலை பாதுகாப்பு வாரவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நிறைவு நாள் ஆகும். வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போலீசார், தொண்டு நிறுவனத்தினர், அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் விபத்தை தடுக்க சாலை விதிகள் குறித்த துண்டுப்பிரசுரங்களை வினியோகித்தனர். முகப்பு விளக்குகளில் கறுப்பு ஸ்டிக்கர்களும் ஒட்டினர். திறந்த வேன்களில் ஆட்களை ஏற்றிச்செல்லக்கூடாது. ஒரே மோட்டார் சைக்கிளில் 2 பேருக்கு மேல் செல்லக்கூடாது என வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தினர்.
இந்த நிலையில் சாலை பாதுகாப்பு விழாவின்போது நடந்த கோர விபத்தில் 4பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உடல்களை பார்த்து அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் கதறி அழுதது சோகமாக இருந்தது.
No comments:
Post a Comment