தமிழக பள்ளிகளில் புதிய தலைமுறை மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், தொடர்பு கொள்ள முடியாத இடங்களிலுள்ள மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும் வகையிலும், ஒருங்கிணைந்த காணொலிக் காட்சி கற்பித்தல் திட்டத்தை செயல்படுத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது.
முதல்கட்டமாக 288 அரசு மேல்நிலை, உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க, ஒருங்கிணைந்த காணொலிக் காட்சி கற்பித்தல் திட்டம் என்ற முன்னோடித் திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை உருவாக்கியுள்ளது. முதல்வரின் 2023 கனவுத் திட்டத்தின் அடிப்படையில், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இடைநிலைக் கல்வியில் அனைத்து பகுதி மாணவர்களுக்கும் கல்வியில் சம வாய்ப்பை உறுதிசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் எளிதில் அணுக முடியாத பகுதிகளுக்கும் தரமான கல்வியை எடுத்துச் செல்வது, கல்வியில் பின்தங்கிய பகுதிகளில் கல்வியை மேம்படுத்துவதே இத் திட்டத்தின் அடிப்படை நோக்கம்.
இதற்காக, மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டத்துக்கு 5 பள்ளிகள் வீதம், 160 மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளும், 128 நடுநிலைப் பள்ளிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு மாணவ, மாணவியரும், நடுநிலைப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு மாணவ, மாணவியரும் இத் திட்டத்தில் பயன்பெறவுள்ளனர்.
இத் திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தலா 2 ஆசிரியர்கள், கணினி இயக்குபவர் ஆகியோருக்கு மண்டல வாரியாக தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு பள்ளிக்கும் கணினி அல்லது மடிக்கணினி, புரஜெக்டர், கேமரா, ஸ்பீக்கர் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி வகுப்புக்கென தனி அறை ஒதுக்கப்படும். இந்த அறையில் 12 மாணவ, மாணவியர் மட்டுமே அமர வைக்கப்படுவர். தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்துப் பள்ளிகளும் காணொலிக் காட்சி வசதியில் இணைக்கப்படும்.
குறிப்பிட்ட நாளில் ஒரு பள்ளி வேறொரு மாவட்டத்திலுள்ள பள்ளியுடன் மேற்கண்ட வசதியில் இணைக்கப்படும். ஒரு பள்ளியில் ஆசிரியர் எடுக்கும் பாடத்தை, அப் பள்ளி மாணவர்களுடன் தொடர்பிலுள்ள பள்ளி மாணவர்களும் நேரடியாக கவனிப்பர். சந்தேகங்களுக்கு இரு பள்ளி மாணவர்களும் வினா எழுப்பி ஆசிரியரிடம் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள முடியும். இரு பள்ளி மாணவர்களும் பாடங்கள் தொடர்பான கலந்துரையாடல் செய்யவும் வாய்ப்பு கொடுக்கப்படும்.
இதன்மூலம் மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை நீங்கி, தன்னம்பிக்கை, நேர்முக எண்ணங்கள் வளரும். குடும்பம், பள்ளி, சமூகம் என்ற 3 நிலைகளிலும் மாணவர்களின் ஒழுக்கநிலை மேம்படுத்தப்படும்.
விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களின் கல்வித் தரத்திலும் தனிக் கவனம் செலுத்தப்படும். தொழில் கல்வி படிப்புக்கு இணையாக விவசாயம் சார்ந்த படிப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்படும். மாணவர்களின் நலன், கல்வி முன்னேற்றத்தில் பெற்றோர்களின் பங்கு உணர்த்தப்படும். பாடத் திட்டத்துக்கு அப்பாற்பட்ட நூலகப் புத்தகங்களையும் பயன்படுத்த மாணவர்கள் தூண்டப்படுவர். விரைவில், தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் இத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது எனவும் இவ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
.
No comments:
Post a Comment