சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் முன்பு வக்கீல் பிரபாகரன் ஆஜராகி கூறியதாவது:–
நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றக்கூடாது என்று எனது கட்சிக்காரர் சிவாஜி சமூக நல பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கை நீங்கள் தள்ளுபடி செய்து விட்டீர்கள்.
அந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவும் அந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்து கொள்ளவும் அனுமதிக்க வேண்டும். மேலும் நேற்று பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதற்கு நீதிபதிகள், ‘‘நீங்கள் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யுங்கள். அந்த வழக்கை உடனடியாக அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ள முடியாது’’ என்று தெரிவித்தனர்.
இதையடுத்து சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
தமிழக சட்டசபை பொன் விழாவை முன்னிட்டு காமராஜர் சாலையில் வைர விழா நினைவு வளைவு அரசு கட்டியது.
இதற்கு தடை கேட்டு அரசகுமார் என்பவர் தொடர்ந்து வழக்கை இந்த ஐகோர்ட்டு 2 நீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்ச் தள்ளுபடி செய்தது. அந்த டிவிசன் பெஞ்சில் நீதிபதி சசிதரனும், ஒரு நீதிபதியாக இருந்தார். அவர் அந்த வழக்கில் வேறு ஒரு தீர்ப்பை வழங்கி விட்டு இப்போது சிவாஜிகணேசன் சிலை வழக்கில் மாற்று கருத்துடன் தீர்ப்பு கூறி உள்ளார்.
இதே போல் 2006–ம் ஆண்டு சிவாஜிகணேசன் சிலை வைக்கும்போது அந்த சிலை போக்குவரத்திற்கு இடையூறாக இல்லை என்று அப்போதே போலீஸ் கமிஷனர் கூறி இருந்தார்.
அதற்கு நேர் எதிராக இப்போது மயிலாப்பூர் போக்குவரத்து உதவி கமிஷனர் சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது என்று கூறி உள்ளார்.
எனவே சிவாஜிகணேசன் சிலையை அகற்ற வேண்டும் என்று நேற்று (23–ந்தேதி) ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும். அந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.
No comments:
Post a Comment