Monday, March 12, 2012

பிரபாகரனின் இளைய மகன் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சி: இங்கிலாந்து டி.வி.யில் 14-ந் தேதி ஒளிபரப்பாகிறது


இலங்கையில் இறுதிக் கட்ட இனப்போரின் போது சரண் அடைந்தவர்களையும், கைதானவர்களையும் இலங்கை ராணுவம் திட்டமிட்டு சுட்டுக் கொலை செய்யும் வீடியோ காட்சியை இங்கிலாந்து செய்தி நிறுவனம் நாளை மறுநாள் வெளியிட உள்ளது. இது சர்வதேச அளவில் இலங்கைக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் பல ஆண்டுகளாக நடந்து வந்த இனப்போர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. இறுதிக்கட்ட சண்டையின் போது நிறைய போர்க் குற்றங்கள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.

போர் விதிகளை மீறி சரண் அடைந்தவர்களையும், கைது செய்யப்பட்டவர்களையும், சிறுவர்களையும் போர் நீதிக்குப் புறம்பாக அவர்களின் கைகளையும், கண்களையும் கட்டி சுட்டுக் கொன்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு ஆதாரமாக இங்கிலாந்தை சேர்ந்த 'சேனல் 4' செய்தி நிறுவனம் சரணடைந்த விடுதலைப் புலிகளை சிங்கள ராணுவம் சுட்டுக் கொல்லும் வீடியோ காட்சியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காட்சியை இலங்கை அரசு மறுத்தது.

பொய்யான, நவீன முறையில் தயாரிக்கப்பட்ட போலியான வீடியோ காட்சி அது என்று இலங்கை அரசு கூறியது. சேனல் 4 செய்தி நிறுவனம் தவிர, இறுதிக்கட்ட போரின்போது போர்ப்பகுதியில் உள்ள தமிழர்களுக்கு உதவச்சென்ற சர்வதேச குழுக்களும் போர்க்குற்றம் நடந்ததை ஒப்புக் கொண்டன.

எனினும் இந்தியா போன்ற அண்டை நாடுகளின் நெருக்கடி இல்லாததால் அதிபர் ராஜபக்சே சர்வதேச அமைப்பின் விசாரணையில் இருந்து தப்பி வந்தார். இந்நிலையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரிலும், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் 19-வது கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் கடந்த 7-ந்தேதி 'நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்த பரிந்துரைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை இலங்கை அரசு நிறை வேற்ற வேண்டும்' என்று வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.

போர்க்குற்றங்கள் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதும் தீர்மானத்தின் ஒரு அம்சம் ஆகும். வரும் 23-ந்தேதி இந்த தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடக்கிறது. இந்த தீர்மானம் வெற்றி பெற்றால், சிக்கல் ஏற்படும் என்பதால் இந்த தீர்மானத்துக்கு எதிராக நாடுகளை தனது அணியில் திரட்டும் வேலையில் இலங்கை அரசு முழு வீச்சில் இறங்கி உள்ளது.

அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் குரல் கொடுத்துள்ளன. ஆனால் தீர்மானம் குறித்த இந்தியாவின் நிலை பற்றி இதுவரை தெளிவுபடுத்தப் படவில்லை.

இலங்கை நடத்திய போர்க் குற்றங்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்திய 'சேனல் 4' செய்தி நிறுவனம் இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் மற்றொரு வீடியோ தொகுப்பை நாளை மறுநாள் (14-ந்தேதி) வெளியிட உள்ளது.

இதுபற்றி லண்டனில் இருந்து வெளிவரும் 'தி இன்டிபென்டென்ட்' பத்திரிகையில் ஆவணப்படத்தை தயாரிக்கும் கேல்லம் மெக்ரே என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரன் நீதிக்குப் புறம்பான வகையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 12 வயதே நிறைந்த அந்த சிறுவன் இடுப்பில் சுடப்பட்டுள்ளது. அவரது மார்பில் 5 துப்பாக்கி குண்டுகள் சுடப்பட்ட துவாரங்கள் காணப்படுகின்றன.

பாலச்சந்திரனோடு மேலும் 5 ஆண்களின் சடலங்கள் கிடக்கின்றன. அவர்கள் அவரது மெய்க்காவலர்களாக இருக்கலாம். அவர்கள் அனைவரும் உடைகள் கழற்றப்பட்டு, பின்புறத்தில் கைகள் கட்டப்பட்டு, கண்களும் கட்டப்பட்ட நிலையில் இலங்கை ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயன்படுத்திய ஆடைகள் அருகிலேயே தரையில் கிடந்தன. சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட போராளிகளும், விடுதலைப் புலிகள் இயக்க முன்னணி தலைவர்களும், சிறுவர்களும் இலங்கை அரசுப் படைகளால் முறைப்படியான கொள்கையின் அடிப்படையின் நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதற்கு இது ஒரு சாட்சியாகிறது.

அந்த வீடியோவில் மே 18-ந்தேதி என்று குறிப்பிடப் பட்டுள்ளது. 12 வயதான பாலச்சந்திரன் மரணம் தொடர்பான புதிய ஆதாரங்கள் இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தங்களை அதிகரிக்க செய்யும். பாலச்சந்திரன் மற்றும் அவரது மெய்க்காவலர்களின் சடலங்கள் கிடக்கும் மிகத் தெளிவான உயர்துல்லியம் கொண்ட ஒளிப்படங்களை 'சேனல்-4' பெற்றுள்ளது.

இவை பிரபல தடயவியல் நிபுணரான பேராசிரியர் டெர்ரிக் பவுண்டர் மூலம் ஆராயப்பட்டது. அவரது மெய்க்காப்பாளர்கள் பார்க்கும்படியாக பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. சிறுவனின் நெஞ்சில் இருந்து இரண்டு அல்லது மூன்று அடி அல்லது அதற்கு குறைவான தூரத்திலேயே சுடப்பட்ட துப்பாக்கியின் குழல்வாய் இருந்துள்ளது.

இறுதிக்கட்ட போரில் பொதுமக்கள் வேண்டுமென்றே இலக்கானதற்கு அதிபர் ராஜபக்சே, பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா ராஜபக்சே, ராணுவ தளபதி சரத்பொன்சேகா உள்ளிட்ட உயர்மட்ட தளபதிகளின் உத்தரவே காரணம்.

இந்த வீடியோ ஆதாரங்கள் வரும் 14-ந்தேதி வெளியிடப்படுகிறது. இலங்கையின் கொலைக் களங்கள்- தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள் என்ற பெயரில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

கடந்த ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட இலங்கையின போர்க் குற்றங்கள் ஆவணப்படத்தின் தொடர்ச்சியாகும். இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

அந்த வீடியோ காட்சி இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை மெய்ப்பிக்கும் மற்றொரு ஆதாரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இதுபற்றி உலக தமிழர் கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன் கூறுகையில், 'சேனல்-4' வெளியிட உள்ள புதிய வீடியோ காட்சிகள், மனிதாபிமானமற்ற முறையில் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களை நிரூபிக்கும் கூடுதல் ஆதாரமாக அமையும்.

குறிப்பாக அதிபர் ராஜபக்சே, அவரது தம்பி கோத்தபயா, ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரின் பங்கு இதன்மூலம் தெளிவாகும். எனவே அமெரிக்கா கொண்டு வந்துள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா மற்றும் உலக நாடுகள் ஆதரிக்க வேண்டும் என்றார்.

No comments: