சிவாஜி கணேசன் நடித்த மிகப்பிரம்மாண்டமான படம் கர்ணன், டிஜிட்டல் திரைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டு மார்ச் 16ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு மார்ச் 14ம் தேதியே துவங்குகிறது.
சென்னையில் சத்யம் சினிமாஸ், சாந்தி காம்ப்ளெக்ஸ், அபிராமி காம்ப்ளெக்ஸ், ஏவிஎம் ராஜேஸ்வரி, பாரதி போன்ற மிக முக்கிய திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட உள்ளது.
இதிகாசக் கதையான கர்ணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம், அந்த காலத்திலேயே மிக அதிகமான பொருட்செலவிலும், பிரம்மாண்டமான செட்களும் போடப்பட்டு எடுக்கப்பட்ட படமாகும்.
இப்படத்தில் சிவாஜியுடன் என்.டி. ராமாராவ், சாவித்ரி, முத்துராமன் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். குந்தி தேவிக்கும், சூரியனுக்கும் பிறக்கும் பிள்ளையான கர்ணன் பிறக்கும் போதே காதில் குண்டலங்களும், உடலில் கவசமும் தரித்து பிறக்கிறான். இவனது வாழ்க்கை முழுவதும் சந்திக்கும் போராட்டங்களும், சூட்சுமங்களும், பெறும் வெற்றிகளும் மிக அழகாக காட்சிகளாக்கப்பட்ட விதம், நமக்கு கர்ணன் என்றாலே சிவாஜியின் முகமும், கிருஷ்ணர் என்றாலே என்.டி.ஆரும் நினைவுக்கு வரும் அளவிற்கு நெஞ்சில் நின்றுவிட்டனர்.
நெஞ்சில் நின்று நினைவான விஷயங்களை மீண்டும் கண் முன் கொண்டு வரும் பணி முடிந்து திரைக்கு வர உள்ளது.
இதுபோன்ற முயற்சிகளுக்கு தமிழ் ரசிகர்கள் நிச்சயம் ஆதரவு அளித்து படத்தை வெற்றி பெற வைத்தால், இதுபோன்ற பல வரலாற்றுச் சிறப்பு மிக்க படங்களை மீண்டும் திரையில் காணலாம். நாமும் குடும்பத்தோடு சென்று திரையரங்கில் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.
திரைப்படத்தை அனைவரும் திரையரங்கிற்குச் சென்று பார்த்து நம் குழந்தைகளுக்கும் இந்த இதிகாசங்களை அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
No comments:
Post a Comment