திருச்சி ஜங்சன் காதி கிராப்ட் அலுவலகம் முன்பு நாம் தமிழர் இயக்கம் சார்பில் தொடர் முழுக்க பட்டினி போராட்டம் இன்று நடைபெற்றது. இலங்கைக்கு எதிரான போர் குற்றவிசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் அரசை கண்டித்து நாம் தமிழர் இயக்க தலைவர் டைரக்டர் சீமான் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் பங்கேற்ற சீமான் பேசியதாவது:-
இலங்கை ராணுவத்தால் ஈழதமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை சேனல்-4 தொலைக்காட்சி ஒளி பரப்பி உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. ஜெனீவா கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிப்பது போல ஏமாற்றும் அறிவிப்பை பிரதமர் வெளியிட்டு உள்ளார்.
அதில் என்ன எழுதப்பட்டு உள்ளது என்பது கூட பிரதமருக்கு தெரியாது. இவர்கள் ஓட்டெப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள். இலங்கையில் தமிழர்கள் வசித்த பகுதி முழுக்க சிங்களர் பகுதியாக மாறிவிட்டது.
முல்லை தீவு 'முல்லிதூவி' என்று மாறிவிட்டது. தமிழர்கள் அங்கு இல்லை. சிங்களர் வாழும் இலங்கை, தமிழர் வாழும் ஈழம் என்று வாக்கெடுப்பு நடத்த கோரி போராட்டம் நடத்தப் போகிறோம்.
முல்லை பெரியாறில் கேரள அரசு அணை கட்ட போவதாக கூறியுள்ளது. அந்த அணை கட்டினால் தமிழ் நாட்டில் ஒரு கேரள காரர் கூட இருக்க முடியாது.
கூடங்குளம் பிரச்சினையில் ஜெயலலிதா நம்பி வந்தவர்களை ஏமாற்றி விட்டார். திட்டமிட்டு மின் வெட்டை ஏற்படுத்தி அணு உலையை திறக்க போகிறார்கள். இதை கண்டித்து 23-ந்தேதி சென்னையில் எனது தலைமையில் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த போராட்டத்தில் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு, புறநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவீன், மாநில தலைமை கழக பேச்சாளர் கல்யாணசுந்தரம், திலீபன், ஜெயசிங், பாலமுரளி, கோட்டை குமார் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். ஏராளமான இலங்கை தமிழர்களும் இதில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment