முதல் - அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த டிசம்பர் மாதம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். போயஸ்கார்டனில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். அவருடன் கணவர் நடராஜன், உறவினர்கள் ராவணன், திவாகரன் உள்பட 14 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நடராஜன், ராவணன், திவாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி சசிகலா பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். என் பெயரை பயன்படுத்தி எனது உறவினர்கள் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு சதித் திட்டங்களில் ஈடுபட்டனர் என்பதை அறிந்து வேதனை அடைந்தேன்.
இவையெல்லாம் எனக்கு தெரியாமல் நடந்தது. நான் ஒரு போதும் முதல் - அமைச்சர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்ய வில்லை. துரோகம் செய்தவர்களுடனான தொடர்பை துண்டித்து விட்டேன். அவர்களுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. “அக்கா”வுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன். இனி அவருக்கு உதவியாக இருக்கவே விரும்புகிறேன் என்று சசிகலா கூறியிருந்தார்.
இதையடுத்து சசிகலா மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருமதி. வி.கே.சசிகலா எனக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதே பொருள் கொண்ட ஒரு அறிக்கையினையும் அவர் வெளியிட்டுள்ளார். திருமதி வி.கே.சசிகலா அளித்துள்ள விளக்கத்தினை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
19.12.2011 அன்று திருமதி வி.கே.சசிகலா மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. அதே சமயத்தில் 19.12.2011 அன்று எம்.நடராஜன், திவாகர், டி.டி.வி. தினகரன், வி. பாஸ்கரன், வி.என். சுதாகரன், டாக்டர் எஸ். வெங்கடேஷன், எம்.ராமச்சந்திரன், ராவணன், அடையாறு மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், டி.வி.மகாதேவன், தங்கமணி ஆகியோர் மீதும், 22.12.2011 அன்று கலியபெருமாள், எம்.பழனிவேல் ஆகியோர் மீதும், 26.1.2012 அன்று தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி, சந்தான லட்சுமி சுந்தரவதனம், சுந்தரவதனம், வைஜெயந்தி மாலா ஆகியோர் மீதும் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை.
அந்த நடவடிக்கை அப்படியே தொடரும். எனவே கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்- அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment