கள்ளர் கல்விக் கழகத்திற்கு தேர்தல் நடத்த ஓய்வு பெற்ற நீதிபதியை நிர்வாக அலுவலராக நியமித்த மதுரை ஐகோர்ட் கிளை, மே 15 க்குள் தேர்தலை நடத்த உத்தரவிட்டது. உசிலம்பட்டி எம்.எல்.ஏ.,கதிரவன் தாக்கல் செய்த மனு: கள்ளர் கல்விக் கழகத்தில் முறைகேடுகள் நடக்கின்றன. இதற்கு தற்போதைய நிர்வாகக்குழு காரணம். கல்விக் கழகத்திற்கு 2013-16 க்கு நிர்வாகிகளை தேர்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் நடத்த வேண்டும். என் புகாரை பதிவுத்துறை தலைவர், கல்லூரிக் கல்வி இயக்குனர் விசாரிக்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.கள்ளர் கல்விக் கழக செயலாளர் பாலசுப்பிரமணியன்,"ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்,' என மற்றொரு மனு செய்தார். நீதிபதி கே.கே.சசிதரன் உத்தரவு: ஏற்கனவே, இதுபோல் பிரச்னை ஏற்பட்டது. சுப்ரீம் கோர்ட்," 2009-13 க்கு தேர்தல் நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்தி நிர்வாக அலுவலராக செயல்படுவார். புதிய நிர்வாகக்குழு தேர்வு செய்யப்படும்வரை, அவரது மேற்பார்வையில் குழு செயல்பட வேண்டும்,' என இருதரப்பிற்கும் பொதுவாக உத்தரவிட்டது. தற்போது இருதரப்பிற்கும் பொதுவாக, நிர்வாக அலுவலராக முன்னாள் நீதிபதி பி.சண்முகம் நியமிக்கப்படுகிறார். உதவி நிர்வாக அலுவலர்களாக வக்கீல்கள் கோவிந்தராஜ், பொன்னம்பலம் செயல்படுவர். இவர்கள் உடனடியாக பொறுப்பேற்க வேண்டும். நிர்வாக அலுவலருக்கு 2 லட்சம், உதவி நிர்வாக அலுவலர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். அவர்களுக்கு, இருதரப்பும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நிர்வாக அலுவலர் தலைமையில் குழு, விதிகளுக்கு உட்பட்டு தேர்தல் நடத்த வேண்டும். ஏற்கனவே நீதிபதி ராமமூர்த்தி பின்பற்றிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். தேர்தல் தொடர்பான அனைத்து நடைமுறைகளையும், நிர்வாக அலுவலரே முடிவு செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். ஆட்சேபணைகள் எழுந்தால், தீர்வு காண வேண்டும். மே 15 வரை தற்போதைய நிர்வாகக்குழுவே தொடரும். ஆனால் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது. மே 15 க்குள் தேர்தல் தொடர்பான நடைமுறைகள் முடிவடையாவிடில், நிர்வாக அலுவலரின் வழிகாட்டுதல்படி குழு செயல்பட வேண்டும்.தேர்தலை சுமூகமாக நடத்த பெரியகுளம் மாவட்ட பதிவாளர், உதவி செய்ய வேண்டும். மதுரை எஸ்.பி.,பாதுகாப்பு அளிக்க வேண்டும்.தற்போதைய குழுவின் நடவடிக்கைகள் பற்றி விசாரிக்குமாறு கோரியதை, இவ்வழக்குடன் இணைத்து விசாரிக்க முடியாது. தனியாக மனுசெய்யலாம். மனுக்கள் பைசல் செய்யபடுகிறது,என்றார்.
No comments:
Post a Comment