சோனியா மருமகனின் நில பேரத்தை அம்பலப்படுத்திய, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அசோக் கெம்கா, ஆறு மாத காலத்தில், நேற்று இரண்டாவது முறையாக, இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஊழலுக்கு எதிராக போராடுவதையும், நியாயமான முறையில் செயல்படுவதையும் வழக்கமாக கொண்டவர், அரியானா மாநிலத்தை சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அசோக் கெம்கா, 47. இவரின், 21 ஆண்டு கால, ஐ.ஏ.எஸ்., அதிகாரி பதவி காலத்தில், இதுவரை, 40 முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆட்சியாளர்களின் கோபத்திற்கு அடிக்கடி ஆளாகும் அசோக் கெம்கா, ஆறு மாதங்களுக்கு முன், டி.எல்.எப்., கட்டுமான நிறுவனத்திற்கும், காங்கிரஸ் தலைவர், சோனியாவின் மருமகன், ராபர்ட் வதேராவுக்கும் இடையேயான, பல நூறு கோடி ரூபாய் நில பேரத்தை அம்பலப்படுத்தினார். இதனால் இவர், அரியானா விதைகள் மேம்பாட்டு துறையின் அதிகாரியாக தூக்கியடிக்கப் பட்டார். இப்போது, அந்த பணியிடத்தில் இருந்தும் மாற்றப்பட்டு, பழமையான பதிவேடுகள் பாதுகாப்பு துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் நேற்றைய, பணியிட மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அரியானாவில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், பூபிந்தர் சிங் ஹூடாவின் ஆட்சி உள்ளது. ஹூடாவுக்கும், காங்கிரஸ் மேலிடத்திற்கும் நெருக்கமான உறவு நிலவி வருவது அனைவரும் அறிந்ததே.
No comments:
Post a Comment