Saturday, April 19, 2014

நடிகர் கார்த்திக் பிரசாரம்


19 April 2014 12:11 AM IST ராமநாதபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.திருநாவுக்கரசரை ஆதரித்து, கமுதி பகுதியில் நடிகர் கார்த்திக் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர், நாட்டிற்காக சேவையும், தியாகமும் புரிந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் சோனியாகாந்தி, ராகுல்காந்தி. மத்திய, மாநில அமைச்சராக பணியாற்றி நிர்வாகத்திறன் படைத்தவர் திருநாவுக்கரசர். அவரை அமோக வெற்றி பெறச்செய்ய வேண்டும் உலக முன்னணி நாடுகளின் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டபோது, இந்தியாவை காப்பாற்றியது காங்கிரஸ் கட்சிதான். எனவே காங்கிரஸ் மீண்டும் ஆட்சியில் அமரவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, மாநில, மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். தமிழகத்தில் எந்த அலையும் இல்லை: நெல்லை கூட்டத்தில் நடிகர் கார்த்திக் பேச்சு நெல்லை,ஏப்.18 நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராமசுப்புவை ஆதரித்து நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக், பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சிக்கு நான் ஆதரவு அளிக்கவில்லை. காங்கிரசில் ஐக்கியமாகி விட்டேன். தற்போது 2-வது சுதந்திர போராட்டத்தை நாம் எதிர் கொண்டு இருக்கிறோம். முதல் சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து, 1947-ம் ஆண்டு சுதந்திரத்தை பெற்றோம். தற்போது பாரதிய ஜனதா என்ற பிரிவினைவாத சக்தியை எதிர்த்து 2-வது சுதந்திர போராட்டம் நடத்து வருகிறது. அதில் நாம் வெற்றி பெற வேண்டும். காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைகளை செயல்படுத்தி உள்ளது. இந்தியாவின் மின் உற்பத்தி 3 மடங்கு உயர்ந்து உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாடு நீங்கவில்லை. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை மாநில அரசு முறையாக பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் இலவசங்களை அள்ளிக் கொடுக்கிறார்கள். இளைஞர்களுக்கு தொழில் தொடங்க உதவி தேவைப்படுகிறது. அதற்கு மத்தியில் இருக்கும் அரசே மாநிலத்திலும் இருக்க வேண்டும். 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும். பாராளுமன்றத்தில் எந்த மசோதா வந்தாலும் அதை பா.ஜனதா கட்சி எதிர்த்தது. அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி, பா.ஜனதா மூத்த தலைவர்களை மதிக்கவில்லை. மோடி அலை இருப்பதாக கூறுகிறார்கள்.தமிழகத்தில் எந்த அலையும் இல்லை. அனைத்து துறைகளிலும் நாடு முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் மக்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும். எனவே நெல்லை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராமசுப்புவுக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு நடிகர் கார்த்திக் பேசினார். தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் தேர்தல்: நடிகர் கார்த்திக் கடும் தாக்கு கன்னியாகுமரி, ஏப். 16– கன்னியாகுமரியில் நடந்த சோனியா காந்தி பிரசார பொதுக் கூட்டத்தில் நடிகர் கார்த்திக் கலந்து கொண்டு பேசியதாவது:– தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் தேர்தல் அதாவது காங்கிரசுக்கும் பா.ஜனதாவுக்கும் நடக்கும் யுத்தம். தர்மம் காங்கிரஸ், அதர்மம் பா.ஜனதா. தற்போது நடைபெற உள்ள மாநில தேர்தல் அல்ல. தேசிய தேர்தல். நீங்கள் யாருக்கு ஓட்டு போடப்போகிறீர்கள் என்று தெளிவாக இருக்க வேண்டும். குழப்பத்தில் இருக்கும் மக்களை மீட்பது நமது கடமை. இந்தியா, இந்தியாவாக இருக்க வேண்டும். பாகிஸ்தான் போல் ஆகி விடக்கூடாது. நரேந்திர மோடியால் உலகத் தலைவர்களிடம் பேச முடியாது. மற்றவர்கள் எழுதி கொடுப்பதை பேசி வருகிறார். அவர் நாட்டை சிதறடிக்க பார்க்கிறார். நமது ஒற்றுமையை சீர்குலைக்க பார்க்கிறார். நமது நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல்காந்தி, நிதி அமைச்சர் சிதம்பரம் ஆகியோர் அரும்பாடுபட்டு வருகிறார்கள். தேசம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும், பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்று பாடுபட்டு வருகிறார்கள். நாட்டை சுற்றி மிகப்பெரிய ஆபத்து உள்ளது. நரேந்திர மோடிக்கு நாட்டை ஆள தெரியாது. குஜராத் மக்களை மிரட்டிதான் அவர் ஓட்டு வாங்கி உள்ளார். யானைக்கு மதம் பிடித்தால் காடு தாங்காது. மதத்துக்கு மதம் பிடித்தால் நாடு தாங்காது. தேசத்தை பிரிக்கத்தான் நரேந்திரமோடிக்கு தெரியும். இலங்கை அதிபருக்கும் நரேந்திர மோடிக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. நரேந்திர மோடி தொடர்ந்து பொய் பேசி வருகிறார். இந்தியா ஜெயிக்க வேண்டுமானால் காங்கிரஸ் ஜெயிக்க வேண்டும். தோற்றால் நாமும் மக்களும் தோற்று விடுவோம். நாட்டை காப்பாற்றுவதற்காக காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மதுரையில் நடிகர் கார்த்திக் காரை முற்றுகையிட்டு கோஷம் மதுரை, ஏப். 16– மதுரை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பாரத் நாச்சியப்பனை ஆதரித்து நடிகர் கார்த்திக் கடந்த 10–ந்தேதி பிரசாரம் செய்ய வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அன்று இரவு அவர் தாமதமாக வந்ததால் அறிவிக்கப்பட்ட இடத்திற்கு சென்று பிரசாரம் செய்யாமல் விருதுநகர் தொகுதியில் பிரசாரம் செய்தார். இதனால் அன்று கார்த்திக்குக்காக காத்திருந்த கட்சி தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய கார்த்திக் மதுரை வந்தார். பசுமலை பகுதியில் திறந்த ஜீப்பில் நின்றபடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– இந்த தேர்தல் நாட்டின் நலன் காக்கும் தேர்தல் பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் நடைபெறும் தர்மயுத்தம், இந்தியா பாகிஸ்தானை போல ஆகாமல் இருக்க காங்கிரசை ஆதரிக்க வேண்டும். இது மக்களவை தேர்தல் சட்டமன்ற தேர்தல் அல்ல. ஆகவே நாட்டை ஆளும் கட்சிக்கே வாக்களிக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இப்பிரசாரத்தை முடித்துவிட்டு கீரைத்துறை ரெயில்வே கேட் அருகே கார்த்திக் பிரசாரம் செய்வார் என்றும் அங்குள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த வழியாக வந்த கார்த்திக் காரை விட்டு இறங்காமல் நீண்ட நேரம் காரில் இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கட்சி தொண்டர்கள், பொது மக்கள் கார்த்திக் காரை முற்றுகையிட்டு எதிர்ப்பு கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகையிட்டவர்களுடன் சமரசம் பேசினார். பின்னர் கார்த்திக் அங்கிருந்து ராமநாதபுரம் புறப்பட்டு சென்றார்.

No comments: