நூல்களைப் படிக்க, படிக்க அடக்கம் பிறக்கும்; அறிவையும் பெற முடியும் என நடிகர் ராஜேஷ் கூறினார்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் உலக புத்தக நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நடிகர் ராஜேஷ் பேசியது:
எனக்கு நூல்கள் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியவர் தமிழ்வாணன். எனது தாயின் தூண்டுதலின்பேரில், 6 வயதாக இருக்கும்போது தமிழ்வாணனின் "நல்ல பாம்பு' என்ற நூலில் ஆரம்பித்து தொடர்ந்து படித்து வருகிறேன். "பொன்னியின் செல்வன்' போன்ற நூல்கள் எல்லாம் காலத்தைத் தாண்டி இன்றைக்கும் பொருந்தக் கூடிய நூல்களாக நிற்கின்றன என விழாவில் முன்னதாக பேசிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் கூறினார்.
மகாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் உள்ள கருத்துகள் எந்தக் காலத்துக்கும் பொருந்துபவை.
ஒரு "டிஎன்ஏ' 10 ஆயிரம் ஆண்டுகள் இருக்கும் என்கின்றனர். எனவேதான் இந்த நூல்களில் இடம்பெற்றுள்ள துரியோதனன், சகுனி, காந்தாரி, கூனி என பல கதாபாத்திரங்கள் இன்றும் ஒவ்வொருவர் வீட்டிலும் உள்ளன. நூல்களைப் படிக்க, படிக்க ஒருவருக்கு அடக்கம் பிறக்கும். திமிரும் அகந்தையும் ஒருவருக்கு இருக்கிறது என்றால், அவருக்கு அறிவு இல்லை என்றுதான் அர்த்தம்.
அறிவு இல்லாதபோதுதான் அகந்தை வரும். என்றைக்கு அறிவு கூடுகிறதோ அன்று பயம் வந்துவிடும். மற்றவர்கள் நம்மை விட புத்திசாலிகளாக இருப்பார்களோ என்ற எண்ணம் வரும். அறிவைப் பெற அதிக நூல்களைப் படிக்க வேண்டும்.
ஆனால், இன்றைய தலைமுறைக்கு நூல்கள் படிப்பதற்குக் கூட நேரம் இல்லாமல் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், ஃபேஸ்புக் என நவீன தொழில்நுட்பங்களோடு வேகமாக வளர்ந்து கொண்டு செல்கின்றனர். இதுதான் தலைமுறை இடைவெளி. எப்படிப் படிக்க வேண்டும் என்பதே பலருக்கு தெரிவதில்லை. பார்த்தல் அறிவு, கேட்டல் அறிவு, அனுபவ அறிவு, நூலறிவு ஆகிய நான்கு வழிகள் மூலம் அறிவைப் பெறும்போதுதான் வாழ்வில் சிறந்து விளங்க முடியும்.
வரலாறு படிக்கும்போது தன்னிரக்கம், சோகம் போன்றவை வராது. எனவே, சுயசரிதைகளை அதிகம் படிக்க வேண்டும். அப்போதுதான் ஏராளமான விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும் என்றார் அவர்.
விழாவில் துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் தலைமையுரை ஆற்றினார்.
No comments:
Post a Comment