தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் ஏ.எம். ஜி.விஜய்குமாரை ஆதரித்து ஸ்ரீரங்கத்தில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் மலர்மன்னன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:–
தற்போது நடைபெற உள்ள தேர்தல், பிரதமரை தேர்ந்தெடுக்கிற தேர்தல். இதில் மோடி தான் பிரதமராக வருவார். நாடு முழுவதும் மோடியின் அலை வீசுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி 320 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். இதில் பா.ஜ.க. 272 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் மட்டும் தான் வெற்றி பெறும். மோடி பிரதமராவது உறுதி.
மோடி பிரதமரானால் தான் தமிழகத்தில் காவிரி, முல்லை பெரியாறு அணை, பாலாறு, இலங்கை தமிழர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு நீதி கிடைக்கும். இதற்கு தமிழகத்தில் நமது கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். அப்போது தான் மோடியிடம் தமிழகத்திற்குரிய பிரச்சினைகளை எடுத்துக் கூறி நீதி பெற முடியும். காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு வஞ்சகமும், துரோகமும் செய்து விட்டது. இந்த நிலைமை மாற வேண்டும்.
மத சார்பற்ற தன்மையை பாதுகாக்கவும், சமூக நீதியை பாதுகாக்கவும், ஈழத்தமிழர் பிரச்சினையில் தீர்வு காணவும், ராஜபக்சேவுக்கு தண்டனை வாங்கி கொடுக்கவும் மோடி பாடுபடுவார். பா.ஜ.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க.வுக்கு என தனித்தனி கொள்கைகள் இருக்கலாம். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு என்று ஒன்று பட்ட செயல்திட்டம் ஒன்று உண்டு.
என்னை விருதுநகர் தொகுதியில் தோற்கடிக்க வேண்டும் என கங்கணம் கட்டி அ.தி.மு.க., தி.மு.க.வினர் செயல்படுகின்றனர். கிராமங்களில் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நான் வெற்றி பெற வேண்டும் என எண்ணுகின்றனர். அது போதும். அ.தி.மு.க. வெற்றி பெற்ற பிறகு பா.ஜ.க.வுடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என ஜெயலலிதா நினைக்கிறார். அவரது கனவு பலிக்காது. ஏற்கனவே ஒரு முறை வாஜ்பாய், அத்வானி பட்டப்பாடு போதாதா? நான் மோடியிடம் எடுத்துக்கூறி ஜெயலலிதாவை பா.ஜ.கவுடன் சேர விட மாட்டேன்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி தன் குடும்ப அரசியலால் தமிழகத்தை பாழ் படுத்திவிட்டார். மோடி திருமணமானதை மறைத்ததாக கருணாநிதி பேசுகிறார். மோடியை பற்றி பேச அவருக்கு தகுதி இல்லை. ஒரு விரலை காட்டி பேசினால், மற்ற 3 விரல்களும் உங்களை (கருணாநிதி) காட்டுகிறது. அதை மறந்துவிடாதீர்கள்.
ஜசோதா பென் இல்லற வாழ்க்கையில் விருப்பம் இல்லாமல் மோடியை விட்டு பிரிந்து சென்றவர். அவர் எங்கேனும் மோடியின் மனைவி என்று ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம். மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் கத்தியை எடுப்பதை தடுப்போம். திருச்சி தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் விஜய்குமார் வெற்றி பெற்று நாடா ளுமன்றம் செல்வார்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தமிழிசை சவுந்தர்ராஜன், தே.மு.தி.க. வேட்பாளர் விஜய்குமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment