Tuesday, April 8, 2014

யார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்?


ஒவ்வொரு இந்தியனும் தயவு செய்து முழுமையாகப் படிக்கவும்... எந்தக் கட்சிக்கும் ஆதரவான பதிவில்லை இது. காங்கிரஸ்காரர்களின் சூழ்ச்சிகளைத் தோலுரித்துக் காட்டுவதே இந்தப் பதிவின் நோக்கம். இணையத்தில் உலவும் பொது என் கண்ணில் பட்ட பதிவு உங்கள் பார்வைக்கு. இதற்கும் எனக்கும் எவ்வித சம்மந்தமுமில்லை... ஒவ்வொரு இந்தியனும் தயவு செய்து முழுமையாகப் படிக்கவும்... யார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்? 5.3.2014-ம் தேதி மகாராஷ்டிரத்தில் உள்ள ஔரங்காபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரம்பு மீறிப் பேசியுள்ளார். பாரதிய ஜனதா கட்சி தனது பொதுக்கூட்டங்களில் “காங்கிரஸ் கட்சியை ஆட்சியை விட்டு வெளியேற்றுவோம் ” என்று பேசி வருவதை ஜீரணிக்க முடியாத ராகுல் காந்தி, மேற்படி பொதுக்கூட்டத்தில் “இந்தியாவிலிருந்து பிரிட்டீஷாரை வெளியேற்றியது போல், பாஜகவையும் நாட்டை விட்டு வெளியேற்றுவோம்” என்று கொக்கரித்துள்ளார். யார் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற் கேள்விக்கு மக்கள் தகுந்த நேரத்தில் பதில் கொடுப்பார்கள். யார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்? நாடு விடுதலை பெற்ற பின்னர், நாட்டின் எல்லைகளை அந்நிய நாட்டிற்கு விட்டுக் கொடுத்தது யார்? நம் பாரத நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியின் பிரதமர்கள் தான் நாட்டின் எல்லையைக் காக்கத் தவறியவர்கள் என்பது முற்றிலும் உண்மை. நம் நாட்டின் வரலாற்றை திரும்பி பார்த்தால் இந்த உண்மையை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். நேரு சீனாவிற்கும், பாகிஸ்தானுக்கும் நமது நாட்டின் எல்லைகளைத் தாரைவார்த்துக் கொடுத்தவர். பின்னர் வந்த இந்திரா காந்தியோ கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தவர், நரசிம்ம ராவ் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தீன்பிகா என்ற பகுதியை பங்களாதேஷ் நாட்டிற்கு குத்தகைக்கு விட்டவர். இப்போதும் நம் நாட்டின் கலாசாரத்தையும் பண்பாட்டையும், இயற்க்கை வளங்களையும் அழித்துக் கொண்டிருப்பவர்கள் காங்கிரஸ் தான்... நாடு விடுதலை பெற்றவுடன் 60 நாட்கள் முடிவதற்குள், பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியை முழுமையாகக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்தியா மீது போர் தொடுத்த்து. ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக அன்றைய பிரதமர் நேரு இருந்ததால், உடனடியாக பாகிஸ்தானின் காட்டுமிராண்டிக் கூட்டத்தை கட்டுப்படுத்தத் தவறினார். இதன் காரணமாக ஏற்பட்ட போரினால், இந்தியா தனது பகுதிகளை பாகிஸ்தானிடம் இழந்துவிட்டு, இன்னும் அதை மீட்க முடியாமல் அது ‘ஆஸாத் காஷ்மீர்’ என்றும், ‘பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர்’ (PoK)என்றும் பெயரை வைத்துக் கொண்டு இருக்கிறது. இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளை உருவாக்கும் மையமாக அப்பகுதி மாறியது யாரால் என்று பார்த்தால், நேரு அவர்களும் காங்கிரஸ் கட்சியினரும் என்பது தெளிவாகவே புரியும். இன்று நாடு பயங்கரவாதத்தால் தத்தளிப்பது யாரால் என்பது ராகுல் காந்திக்கு தெரியுமா, தெரியாதா? இந்த இழிநிலைக்குக் கொண்டு சென்றவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் நேரு என்பதும், உலக அளவில் தனது செல்வாக்கு கூட வேண்டும் என்ற ஆசையில் இந்தியாவின் பகுதிகளை விட்டுக் கொடுத்தவரின் வாரிசு தாங்களே என்பதையும் ராகுலுக்கு எந்த ஊடகமும் சொல்வதில்லையே ஏன்? 1999-ல் பாகிஸ்தான் கள்ளத்தனமாக ஜம்மு காஷ்மீரின் கார்கில் பகுதியில் ஊடுருவிய போது, ஊடுருவிய பாகிஸ்தானியர்களை முற்றிலுமாக வெளியேற்றிய முதல் பிரதமர் வாஜ்பாய் என்பதை மறந்துவிடக் கூடாது. ஊடுருவல்காரர்களை முற்றிலுமாக வெளியேற்றிய பின்னரேஅமெரிக்க அதிபரின் தொலைபேசிக்கு மதிப்புக் கொடுத்தார் வாஜ்பாய். இது ராகுல் காந்திக்கு தெரியுமா? உலக வரலாற்றில் சீனாவிற்கு அங்கீகாரம் கொடுத்த நாடு இந்தியா என்பதையும் மறந்துவிட்டு, நாடு பிடிக்கும் ஆசையில் சீனா இந்தியா மீது யுத்தம் நடத்தியது. 1962-ல் நடந்த சண்டைக்குப் பின் சீனா சட்டவிரோமாக அருணாசலப் பிரதேசத்தில் 20,000 ச.கி.மீ இடங்களையும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு உள்பட்ட லடாக் பகுதியில் 38,000 ச.கி.மீ பரப்பளவு கொண்ட அக்ஷாய்சின் பகுதியையும், 1963-ல் பாகிஸ்தான் சீனாவிற்கு தானமாக கொடுத்த 5,180 ச.கி.மீ. பகுதியையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமைக்கு நாட்டைக் கொண்டுவந்த அரசு காங்கிரஸ் அரசு, முதல் பிரதம மந்திரி நேரு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இன்று வரை காங்கிரஸ் அரசு சீனாவிற்கு தங்களுடைய எதிர்ப்பை வெற்று வார்த்தைகளில் மட்டுமே காட்டிக் கொண்டிருக்கிறது. பா.ஜ.க.வை நாட்டை விட்டு வெளியேற்றுவோம் எனக் கொக்கரிக்கும் திருவாளர் ராகுல் காந்திக்கு ஒரு உண்மையை உணர்த்தியாக வேண்டும். பல்வேறு காலகட்டங்களில் பிரதமர் மன்மோகன் சிங், ராணுவ அமைச்சர் உள்பட பலர் அருணாசலப் பிரதேசத்திற்குச் சென்றபோது, சீனா எச்சரிக்கை செய்தது. அப்போதெல்லாம் சீனாவிற்கு தக்க பதிலடி கொடுக்க இயலாதவர்கள் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள். ஆனால் இதற்கு நேர்மாறாக நரேந்திர மோடி அருணாசலப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் செய்தபோது, சீனாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். சீனா நாடு பிடிக்கும் ஆசையைக் கைவிட்டு சமாதான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற மோடியின் எச்சரிக்கைக்கு சீனா உடனடியாக பதிலும் உடனடியாக- அதுவும் நாகரிகமான முறையில்- கொடுத்தது. இந்தச் செயல்பாடே பா.ஜ.க.வினர் தேசப்பற்று உள்ளவர்கள் என்பதை ராகுல் காந்திக்கு புரியவைத்திருக்க வேண்டும். இன்று தமிழகத்தை தாயகமாகக் கொண்டுள்ள ஈழத் தமிழர்களின் வாழ்வில் இருட்டை ஏற்படுத்தியவர் இந்திரா காந்தி. ராமநாதபுரம் மன்னருக்குச் சொந்தமான கச்சத் தீவை, அரசரின் அனுமதியைக் கூடக் கேட்காமல், இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தவர் இந்திரா காந்தி என்பதை மறந்து விடக் கூடாது. லால்பகதூர் சாஸ்திரியும், ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவும் ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தம் காலாவதி ஆகாமல் காப்பாற்றவும், இலங்கையுடன் நல்லெண்ண நட்புறவு கொள்வதற்கும் ஓர் அடையாளமாகவும் தான் கச்சத் தீவு இலங்கைக்கு அளிக்கப்படுகிறது என்று நாடாளுமன்றத்தில் திருமதி இந்திரா காந்தி கூறியபோது, இது நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தாக முடியும் என குரல் கொடுத்தவர்கள் அன்றைய ஜனசங்கத்தினர் என்பதும், அவர்களே இன்று பாரதிய ஜனதா கட்சியினர் என்பதும் ராகுல் காந்திக்கு தெரியுமா? அன்று இந்திரா காந்தி செய்த தவறு , 800க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கும், நூற்றுக் கணக்கான தமிழக மீனவர்கள் அன்றாடம் கைது செய்யப்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது என்பதை நினைக்கும் போது, நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டிய சக்தி எது என்பது நன்கு புரியும். நாட்டின் மீது உங்கள் சிந்தனையை செலுத்துங்கள்... நாடு நலம் பெற சிந்தியுங்கள்... நாட்டில் நல்லாட்சி மலர உதவிடுங்கள்... வாழ்க பாரதம்... பதிவு:ஈரோடு ஆ.சரவணன்

No comments: