இலங்கை இறுதிக்கட்ட போர் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. குழு அங்கு போர் குற்றம் நடந்ததாகவும், 40 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாகவும் தனது அறிக்கையில் கூறி உள்ளது.
இதனால் அதிபர் ராஜபக்சே மற்றும் ராணுவ தளபதிகள் சர்வதேச போர் குற்ற விசாரணைக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது இலங்கை அரசை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இந்த நிலையில் ஐ.நா. குழு அறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், இந்த அறிக்கையை குப்பை தொட்டியில் வீசுவோம் என்றும் இலங்கை மந்திரி கலாநிதி சரத் கூறினார்.
ஐ.நா. பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையை நாம் நிராகரிக்கின்றோம். இது சட்டவிரோதமானது. விசாரணை செய்ய அவருக்கு அனுமதி வழங்கியவர் யார்? இலங்கையில் இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்துமாறு அதிகாரப்பூர்வமாக கோரியவர் யார்? இலங்கை ஜனாதிபதியோ, மக்களோ, வேறு நிறுவனங்களோ விசாரணை நடத்துமாறு கோரவில்லை.
தன்னிச்சையாக நடவடிக்கையை எடுப்பதற்கு பான் கீ மூனுக்கு உரிமை இல்லை. இது சட்ட விரோதமான நடவடிக்கையாகும். ஐ.நா. நிபுணர் குழு என்று இதனைப் பலர் குறிப்பிடுகின்றனர். இது நிபுணர் குழுவல்ல. ஐ.நா. பொதுச்செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழு. பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட இந்த குழுவுக்கு ஆரம்பம் முதலே அரசு தனது எதிர்ப்பை தெரிவித்து வந்தது.
இந்த குழுவுடன் நாம் எந்தவொரு நடவடிக்கையையும் ஒரு போதும் மேற்கொள்ள வில்லை. இவர்கள் இலங்கைக்கு வரவில்லை. சானல் 4 காட்சிகளையும் இலங்கையில் உள்ள ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளரான கோர்டன் வைஸ் தெரிவித்த கருத்துக்களையுமே அவர்கள் சாட்சியங்களாக பதிவு செய்துள்ளனர். கோர்டன் வைஸ் இலங்கையில் இருந்தபோது தாம் வடக்குக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறாயின் அவரின் சாட்சியங்கள் உண்மையென ஏற்றுக் கொள்வது எப்படி? இவ்வாறான அறிக்கை ஒன்றை நாடொன்று நிராகரித்த பின்னர் சர்வதேச அமைப்புகள் அதாவது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை, அல்லது மனித உரிமை பேரவை போன்றன விசாரணையில் ஈடுபடாது.
அவ்வாறு ஈடுபடும் சம்பிரதாயமும் கிடையாது. அவ்வாறு அந்த நிறுவனங்கள் கோரும் பட்சத்தில் மாத்திரமே பான் கீ மூனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் அதனை கிடப்பிலே போட்டு முடிக்க வேண்டியதுதான் மிச்சம். அரசாங்கம் என்ற ரீதியில் இதனை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். எனவே அறிக்கையை குப்பைத் தொட்டியில் வீச வேண்டியது வரும். இவ்வாறு இலங்கை மந்திரி கலாநிதி சரத் கூறியுள்ளார்.
உதவி - நக்கீரன்.
No comments:
Post a Comment