சென்னை, மே 25: எம்.ஜி.ஆரைப் பின்பற்றும் ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டார்கள் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் திட்டம் தீட்டியதாக விடுதலைப் புலிகளின் தலைவராக தனக்குத் தானே மகுடம் சூட்டிக் கொண்ட குமரன் பத்மநாதன் கூறியுள்ளார்.
புலிகள் அமைப்பிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னால் நீக்கப்பட்டவருக்கு புலிகளின் சார்பில் பேசுவதற்கு எத்தகைய உரிமையும் இல்லை. இப்போது அவர் இலங்கை அரசின் கைப்பாவையாக உலகெங்கும் உள்ள புலிகளின் ஆதரவாளர்களை அடையாளம் காட்டும் துரோகப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டவுடன் அதில் தங்களுக்குத் தொடர்பில்லை என்றும், இக்கொலை சம்பந்தமாக தங்களுக்குத் தெரிந்த சில உண்மைகளை இந்திய புலனாய்வுத் துறையிடம் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் சர்வதேச புலிகள் செயலகத்தின் தலைவராக இருந்த கிட்டு பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
ஆனால், இந்திய புலனாய்வுத் துறை அவரைச் சந்தித்து உண்மைகளைப் பெற முயற்சிக்கவில்லை. ஈழ மக்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ், திமுகவுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். எனவே, தமிழக மக்களைக் குழப்புவதற்காக இந்திய, இலங்கை நாடுகளின் உளவுத் துறைகள் இதுபோன்ற பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா ஈழத் தமிழர் பிரச்னையில் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்புகள் மத்திய அரசை கலக்கமடையச் செய்துள்ளன. இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசுக்கு எதிரான நிலையை தமிழக அரசு எடுத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதால் ஜெயலலிதாவைக் கொல்ல புலிகள் திட்டம் தீட்டியதாக குமரன் பத்மநாதன் மூலம் உளவுத் துறை செய்தி பரப்பியுள்ளது.
புலிகள் அமைப்புக்கு எம்.ஜி.ஆர். செய்த உதவிகளை அவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆரைப் பின்பற்றும் ஜெயலலிதா உள்பட யாருக்கும் புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள் என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment