சன் பிக்சர்ஸ் வெளியிடுவதாக இருந்த பாலாவின் அவன் இவன் படத்தை இப்போது அதன் தயாரிப்பாளர்களான ஏஜிஎஸ் நிறுவனமே வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த கையோடு திரையுலகில் காட்சிகள் படுவேகமாக மாறிக் கொண்டே உள்ளன.
கருணாநிதி குடும்ப வாரிசுகளின் சன் பிக்சர்ஸ், ரெட்ஜெயன்ட், கிளவுட் நைன் போன்ற கம்பெனிகளுக்கு விற்றது போக மீதம் உள்ள படங்கள்தான் மற்றவர்களுக்கு என்ற நிலையில் தமிழ் சினிமாக்காரர்கள் போன மாதம் வரை இருந்தனர். ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது.
கருணாநிதி குடும்பத்தாரிடம் கியூ வரிசையில் காத்திருந்து படங்களை விற்று வந்த தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் இப்போது ஜகா வாங்க ஆரம்பித்துள்ளனர். இனிமேல் இந்த கம்பெனிகளிடம் படங்களை விற்க வேண்டிய கட்டாயமோ, நெருக்கடியோ, நிர்ப்பந்தமோ, மிரட்டலோ இல்லை என்பதால் படு சுதந்திரமாக பழைய பாணியில் படங்களை விற்க, விநியோகிக்க ஆரம்பித்துள்ளனர்.
வழக்கமான விநியோகஸ்தர்கள் மூலம் அல்லது சொந்தமாக ரிலீஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர். மேலும் இனியும் இவர்கள் மூலம் படங்களை வெளியிட்டால் அது படத்துக்கே எதிராக முடிந்துவிடும் என்ற பயமும் தயாரிப்பாளர்களிடம் எழுந்துள்ளதாம்.
ஏற்கெனவே உதயநிதி அழகிரி வசமிருந்த மாவீரன் படத்தை, இப்போது அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸே வெளியிடுகிறது.
அடுத்ததாக பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள அவன் இவன் படம். இதனை ஏஜிஎஸ் மூவீஸ் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரித்திருந்தார். ஆனால் சன் பிக்சர்ஸுக்கு படத்தை விற்றுவிட்டதாகக் கூறப்பட்டது. ஏற்கெனவே தனது எங்கேயும் காதல் படத்தையும் சன்னுக்குதான் இவர் விற்றிருந்தார்.
இந்த நிலையில், இப்போது படத்தை தானே சொந்தமாக வெளியிடும் முடிவை எடுத்துள்ளார் கல்பாத்தி அகோரம்.
No comments:
Post a Comment