சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை போலீசார் கைது செய்தனர். அவரை நேற்று ஜார்ஜ் டவுன் 7-வது கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி 12-ந்தேதி வரை புழல் சிறையில் அடைத்தனர்.
ஐகோர்ட்டில் அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 2-வது ஜாமீன் மனுவும் நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றவியல் சட்டத்தின்படி முதலில் செசன்சு கோர்ட்டில்தான் ஜாமீன் மனுதாக்கல் செய்யவேண்டும் என்று கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கைதை கண்டித்து, கட்சி தொண்டர்கள் வியாசர்பாடி சர்மாநகர், சிவகாமி அம்மை யார் காலனி பகுதியில் கண்டன போஸ்டர்களை ஒட்டினர். மகாகவி பாரதியார் நகர் போலீசார் விரைந்து சென்று போஸ்டர் ஒட்டிய வியாசர் பாடியை சேர்ந்த சுரேஷ், சத்தியமூர்த்தி, காஜா மொய்தீன், அயாத்பாஷா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
இன்று காலை 9 மணியளவில் 4 பேரையும் புளியந் தோப்பு போலீஸ் நிலையத் திற்கு போலீசார் அழைத்து வந்தனர். இதுபற்றி தெரிந்ததும் பகுஜன் சமாஜ் கட்சி வட சென்னை மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல், செயலாளர் ஜவகர்தாஸ், நாதன், வக்கீல்கள் செந்தில்குமார், பாலா, பட்டு ரமேஷ் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் திடீரென போலீஸ் நிலையத்தின் உள்ளே புகுந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்தனர். போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கர், உதவி கமிஷனர் அரி, இன்ஸ்பெக்டர் மனோ கரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட் டவர்களுடன் சமாதான பேச்சு நடத்தினர்.
கட்சி நிர்வாகி ஒருவர் கூறும்போது, அரசியல் பழி வாங்கும் காரணத்திற்காக எங்கள் தலைவர் ஆம்ஸ்ட் ராங்கை கைது செய்துள்ளனர். அவரை விடுதலை செய்ய வேண்டும். போலீசாரின் அராஜக போக்கை கண்டித்து போஸ்டர் ஒட்டிய எங்கள் கட்சியை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இல்லையெனில் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றார். பகுஜன் சமாஜ் கட்சியின ரின் போராட்டத்தால் பதட்டமான நிலை நிலவி வருகிறது. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஆம்ஸ்ட் ராங்குக்கு ஜாமீன் வழங்க கோரி அவரது சார்பில் சென்னை செசன்சு கோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறி இருப்பதாவது:-
சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பாக போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் ஆம்ஸ்ட்ராங் பெயர் இல்லை. ஆனால் குற்றப்பத்திரிகையில் 2-வது குற்றவாளியாக சேர்த்து இருக்கிறார்கள். அரசு விசாரணை கமிஷனில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பது உள்நோக்கம் கொண்டது. எனவே அவருக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஜாமீன்மனுமீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment