இடாநகர் : அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு உட்பட 4பேர் மரணமடைந்தனர். கடந்த சனிக்கிழமை திடீரென மாயமான அருணாச்சல பிரதேச முதல்வரின் ஹெலிகாப்டர் 5 நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஹெலிகாப்டர் லோப்தாங் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரது உடலும் சிதைந்து காணப்படுகிறது.
முன்னதாக, தவாங் நகரில் இருந்து புறப்பட்ட 20 நிமிடத்தில் சேலா கணவாய் வழியாக பறந்தபோது ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நொறுங்கி கிடக்கும் என்று அஞ்சப்பட்டது.
காட்டுப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஹெலிகாப்டரை தேடும் பணிகள் மெதுவாக நடைபெற்றது. காட்டுப்பகுதிக்குள் 4 ஆயிரம் பேர் கொண்ட மீட்பு குழுவும் நுழைந்து தேடி வந்தது. இந்த குழுவில் ராணுவ வீரர்கள், துணை ராணுவத்தினர், போலீசார், பொதுமக்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனாலும் மழை காரணமாக அவர்களாலும் வேகமாக செல்ல முடியவில்லை. செயற்கைகோள், விமானப்படையின் சுகாய் போர் விமானங்கள் எடுத்த படங்களில் ஒரு சில இடங்களில் உலோக துண்டுகள் கிடப்பது தெரியவந்தது.
இதனால், அந்த பகுதிகளில் நேற்று தேடுதல் வேட்டை நடந்தது. ஆனாலும், மலையில் எளிதாக முன்னேற முடியாததால் அந்த உலோக துண்டுகள் கிடக்கும் பகுதிகளை அவர்களால் அடைய முடியவில்லை. தொடர்ந்து மழை பெய்ததால் புறப்பட்ட 45 நிமிடத்தில் ஹெலிகாப்டர்களும் திரும்பி வந்து விட்டன. இதற்கிடையே உலோக துண்டுகள் கிடக்கும் பகுதியில் ராணுவத்தினரை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று கயிறு மூலம் இறக்க முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment