Wednesday, May 25, 2011

சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை: விரைவில் லண்டன் செல்கிறார் ரஜினி


சென்னை, மே 24: சிறுநீரக பாதிப்புக்கு தொடர் சிகிச்சை பெற நடிகர் ரஜினிகாந்த் (60) இன்னும் மூன்று அல்லது நான்கு தினங்களில் லண்டன் செல்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த்துக்கு நெருக்கமான திரைப்படத் துறையினர் இதை ஊர்ஜிதப்படுத்தினர். திரைப்படத் துறையினரின் உதவியுடன் அவர் லண்டன் செல்கிறார். கடந்த மாதம் மயிலாப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே நடிகர் ரஜினிக்கு சிறுநீரக பாதிப்பு பிரச்னை இருந்து வருகிறது. இப்போது அவர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் தனிப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராணா படப்பிடிப்பு தொடக்க விழா அன்று..."இரோஸ் இண்டர்நேஷனல் மீடியா லிமிடெட்' நிறுவனம் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் "ராணா' படப்பிடிப்பு சென்னை வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோவில் ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கியது; இந்த படப்பிடிப்பின் தொடக்க தினத்தன்று நடிகர் ரஜினிகாந்த்துக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது முதல் கடந்த 25 நாள்களாக ரஜினிகாந்த் உடல்நலக் குறைவுடன் உள்ளார்.

உடல்நலக் குறைவு-அடிப்படைக் காரணம் என்ன? மருத்துவ ரீதியாக ரத்த அழுத்தத்துக்கும் சிறுநீரகத்தின் செயல்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கடந்த ஏப்ரல் 29-ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கு முன்பே, நடிகர் ரஜினிகாந்துக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை, ஆரம்ப நிலை சர்க்கரை நோய் ஆகியவை இருந்துள்ளன. உயர் ரத்த அழுத்தப் பிரச்னைக்கு உரிய சிகிச்சையை எடுக்காமல் இருந்ததால், சிறுநீரகச் செயல்பாட்டில் ஓசையின்றி பிரச்னைகள் ஆரம்பித்திருந்தன.

சிறுநீரகத்தில் பாதிப்பு என்ன? மயிலாப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவருக்கு ரத்த, சிறுநீர்ப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. மூச்சுத் திணறல்-அதீத உடல் சோர்வுக்கான காரணங்களை பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

சிறுநீரகத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு ரத்தத்தில் அதிக அளவு சேரும் உப்புச் சத்து ("யுரியா'), பொட்டாஷியச் சத்து, கிரியாட்டினின் பாஸ்பேட்டிலிருந்து பிரியும் கிரியாட்டினின் எனும் வேதிப்பொருள் ஆகியவற்றை சிறுநீரகங்கள் வடிகட்டி சிறுநீர் மூலம் வெளியேற்றி விடும். அதாவது, ரத்தத்தில் "யூரியா' எனப்படும் உப்புச் சத்து அளவு 40 மில்லிகிராமுக்குக் குறைவாக இருக்க வேண்டும்; பொட்டாஷியச் சத்து 4.5 மில்லிகிராமுக்குக் குறைவாக இருக்க வேண்டும்; கிரியாட்டினின் அளவு 1 மில்லி கிராமுக்குக் குறைவாக இருக்க வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்த்துக்கு தொடக்கத்தில் செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகளிலேயே மேலே குறிப்பிட்ட உப்புச் சத்து, பொட்டாஷியச் சத்து, கிரியாட்டினின் அளவுகள் அதிகமாக இருந்தன. இதன் மூலம் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.

அதீத சோர்வு, மூச்சுத் திணறல் ஏன்? சிறுநீரகச் செயல்பாடு ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளதால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைத் தீர்மானிக்கும் "எரித்ரோபாய்ட்டின்' ஹார்மோன் உற்பத்தியில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் ரத்தத்தில் இயல்பாக 14 கிராம் இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவு (ரத்த சோகையைத் தடுப்பது.) அவருக்குக் குறைந்தது. அதீத உடல் சோர்வு ஏற்பட்டதற்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்ததும் காரணம். சிறுநீரகச் செயல்பாடு பாதிப்பு காரணமாகவே மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

மே 13 முதல்...: கடந்த ஏப்ரல் 29-ம் தேதி உடல் நலக் குறைவு ஏற்பட்டு, மயிலாப்பூர் தனியார் மருத்துவமனையில் இரண்டு முறை சிகிச்சை பெற்று நடிகர் ரஜினி வீடு திரும்பினார். எனினும் மூச்சுத் திணறல் தொடர்ந்ததால், மே 13-ம் தேதி இரவு சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் தனி அறையில் அனுமதிக்கப்பட்டார்.

இதய மருத்துவ நிபுணர் எஸ்.தணிகாசலம் தலைமையிலான சிறப்பு மருத்துவ நிபுணர் குழுவினர் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். சிறுநீரகச் செயல்பாடு பாதிப்பு காரணமாக அவருக்கு ஹீமோடயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது மூச்சுத்திணறல் பிரச்னையைச் சீராக்க மே 18-ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 22) தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து மீண்டும் தனி அறைக்கு மாற்றப்பட்டார். சிறுநீரக பாதிப்பு காரணமாக இதுவரை அவருக்கு 5 முறை ஹீமோடயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

உணவில் கட்டுப்பாடு: சிறுநீரக பாதிப்பு காரணமாக உப்பு, புரதச் சத்து குறைவான உணவையே சாப்பிட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குளிர் பானங்களை அவர் இனி சாப்பிடக் கூடாது; பாதாம்-பிஸ்தா-முந்திரி உள்ளிட்டவை மற்றும் கீரைகளையும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

நலமாக உள்ளார்: தனி அறையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் இப்போது நலமாக உள்ளார். தொலைக்காட்சி பார்க்கிறார். குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுகிறார். எனினும் சிறுநீரக பாதிப்புக்கு தொடர் மருத்துவ கண்காணிப்பு மற்றும் சிகிச்சை பெற அவரை லண்டன் அழைத்துச் செல்ல குடும்பத்தினர் திட்டமிட்டு வருகின்றனர்.

No comments: