Wednesday, May 25, 2011

நேர்மையாக நடக்க நல்ல சந்தர்ப்பம்!

வாங்கிய வீட்டில் ரூ.20 லட்சம் புதையல் : சொந்தக்காரரிடம் பணம் ஒப்படைப்பு!

சால்ட் லேக் சிட்டி : அமெரிக்காவில் தாங்கள் விலைக்கு வாங்கிய வீட்டில் இருந்த 20 லட்ச ரூபாயை, அந்த வீட்டின் பழைய உரிமையாளரிடம் திருப்பிக் கொடுத்துள்ளது ஒரு குடும்பம். அமெரிக்காவின் உட்டா மாகாண தலைநகர் சால்ட் லேக் சிட்டியின் புறநகர் பகுதி தான், பவுன்டிபுல். இங்கு பெரின் என்பவர் சமீபத்தில், வீடு ஒன்றை விலைக்கு வாங்கினார்.

பெரின், சால்ட் லேக் சிட்டி நகரில் வெளியாகும், "டெசர்ட் நியூஸ்' பத்திரிகையில் ஓவியக் கலைஞராக பணியாற்றுகிறார். தங்கள் குடும்பத்துக்கென்று, கடைசியில் ஒரு வீடு சொந்தமாகக் கிடைத்து விட்டது என்ற சந்தோஷத்தில், குடிபுகுவதற்கு முன் ஒருநாள், வீட்டைச் சுற்றிப் பார்க்கச் சென்றார். அப்போது, மாடிக்கும் போனார்.

அங்கு சுவரின் ஒரு பகுதியில், துணி ஒன்று வெளியில் நீட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார். ஏணி ஒன்றில் ஏறி, துணி இருந்த இடத்தை நெருங்கியவருக்கு, அங்கு சுவற்றில் ஒரு சிறு கதவு தெரிந்தது. ஆர்வத்தில், அந்த கதவைத் திறந்தவர், அதிர்ச்சியில் உறைந்து போனார். உள்ளே ஒரு இரும்புப் பெட்டி இருந்தது. அதை வெளியில் எடுத்தார். அடுத்தடுத்து, ஆறு பெட்டிகள் இருந்தன. ஒரு பெட்டியைத் திறந்த போது அதில், கத்தை கத்தையாக பணம் இருந்தது.

அதிர்ச்சியில் இருந்து மீண்ட பெரின், அவற்றை தன் காரின் பின்பகுதியில் வைத்துக் கொண்டு, தன் பழைய வீட்டுக்குச் சென்றார். அங்கு அவர், அவர் மனைவி மற்றும் குழந்தைகள் என அனைவரும் சேர்ந்து அந்தப் பெட்டிகளில் இருந்த பணத்தை எண்ணினர். நாற்பதாயிரம் டாலர் (18 லட்ச ரூபாய்) அளவு தான் அவர்களால் எண்ண முடிந்தது. ஆனால் மேற்கொண்டு, மேசையில் வேறு பணம் கொட்டிக் கிடந்தது.

மொத்த பணத்தையும், வீட்டு சொந்தக்காரரிடம் ஒப்படைத்த பின் அவர் அளித்த பேட்டியில், "இந்தப் பணம் நான் வாங்கிய வீட்டின் உரிமையாளர் சேர்த்தது. அவர் தன் வாழ்நாளில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்தது, எனக்கல்ல என்பதை நான் உணர்ந்தேன். என் குழந்தைகளுக்கு ஒரு நல்ல பாடம் சொல்லிக் கொடுக்கவும், நான் நேர்மையாக நடக்கவும், இதை விட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்று மட்டும் தெரிந்து கொண்டேன்' என்று கூறினார்.


*********************************************************


தினமலர் செய்தி - 22 மே
நேர்மை என்றால் இதுவன்றோ நேர்மை! என்ன ஒரு சத்தியமான சொற்கள்! 'முதலில் நான் நேர்மையாக இருந்தால்தானே என் குழந்தைகளுக்கு போதிக்க முடியும்..' என்ற அத்தந்தையின் பொறுப்புணர்வு பிரமிக்க வைக்கிறது! சிலகாலங்களுக்கு முன் நம்மில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் பயணித்தவர் விட்டுச்சென்ற பல லட்சம் பெறுமான நகைகளைத் திருப்பிக்கொடுத்தது திருமண வாழ்க்கையை காப்பாற்றியது பற்றியும் படித்தேன்! இப்படியெல்லாம் இன்னும் சிலர் இருப்பதால்தான் மின்னிப் பெய்கிறதோ மழை! படித்துப் பலரும் குறைப்பார் பிழை!

No comments: