கொழும்பு, மே.26: விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவி இசைச்செல்வி என்று அழைக்கப்படும் சசிரேகாவும், அவரது 2 குழந்தைகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இலங்கைத் தமிழ் இணையதளங்களில் வெளியாகி உள்ள அந்த செய்தியின் விவரம்:
இசைச்செல்வியும் அவரது குழந்தைகளும் ராணுவத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வன்னியில் இறுதி யுத்த களத்திலிருந்து மீண்டு தடுப்பு முகாமுக்கு சென்று தனது குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இசைச்செல்வியை ராணுவத்தினர் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர்.
இந்த நிலையில் நிபந்தனைகளின் அடிப்படையில் அவரை ராணுவத்தினர் விடுதலை செய்துள்ளனர்.
தமிழ்ச் செல்வனின் குடும்பத்தார் 2009ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் பகுதியில் ராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர். அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பனாகொடை ராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்தனர்.
சரணடைந்த பின்னர் விடுதலைப் புலி உறுப்பினர்களும் அவர்களது குடும்பத்தாரும் வவுனியா முகாம் ஒன்றில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்று அழைக்கப்படும் கருணா முயற்சியினால் தடுப்புக் காவல் முகாமிலிருந்து, ராணுவ முகாமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழ்ச் செல்வனின் மனைவி சசிரேகா விடுதலைப் புலி பெண் போராளியாக செயற்பட்டவர். அவரது 12 வயதான மகள் அலைமகள் மற்றும் 8 வயதான மகன் ஒளிதேவன் ஆகியோரும் இவ்வாறு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
தமிழ்ச் செல்வனின் குடும்பத்தார் இலங்கையில் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமது கணவரின் பெயரைப் பிரசாரம் செய்தல் மற்றும் வெளிநாட்டு புலம்பெயர் புலி ஆதரவு தமிழ் அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுதல் ஆகியன தடை செய்யப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment