ராமநாதபுரம் நகரசபை தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் நாகநாதசேதுபதி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் எம்.எல்.ஏ., ரித்தீஷ் எம்.பி. ஆகியோர் தி.மு.க.வினருடன் அண்ணாநகர் பகுதியில் வாக்குகள் சேகரித்தனர். அப்போது அங்கு நகர தி.மு.க. செயலாளர் ஆர்.ஜி.ரத்தினமும் தி.மு.க. வினருடன் வந்தார். அவர்களுக்குள் திடீர் என்று வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அது கோஷ்டி மோதலாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கல் மற்றும் சோடா பாட்டிலால் தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் ஆர்.ஜி. ரத்தினத்தின் தங்கை கலாராணி, சரவணன் ஆகியோரும் ரித்தீஷ் எம்.பி.யின் ஆதரவாளர் 8-வது வார்டு கிளை செயலாளர் செல்லப்பாண்டியனும் காயம் அடைந்தனர்.
பெட்ரோல் குண்டுவீச்சு மாலையில் ரித்தீஷ் எம்.பி., முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனுடன் ராமநாதபுரம் அண்ணாநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தேர்தல் பணி குறித்து பேசி கொண்டு இருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டை ரித்தீஷ் எம்.பி. வீட்டில் வீசினர். மேலும் சோடாபாட்டில், கற்களை வீசினர். ரித்தீஷ் எம்.பி.யின் தந்தை குழந்தைவேலுவின் கார் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், சாயல்குடி தி.மு.க. பிரமுகர் ராமர் ஆகியோரின் கார்கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு- பதட்டம் ஏற்பட்டது. மோதல் தொடர்பாக காயம் அடந்த ஆர்.ஜி. ரத்தினத்தின் தங்கை கலாராணி ராமநாதபுரம் பி-1 போலீசில் புகார் செய்துள்ளார். முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், ரித்தீஷ் எம்.பி., கார்மேகம், நகரசபை தி.மு.க. வேட்பாளர் நாக நாதசேதுபதி, தி.மு.க. துணை செயலாளர் அகமது தம்பு, அழகிரி உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரித்தீஷ் எம்.பி.யின் ஆதரவாளர் செல்லப்பாண்டியன், கொடுத்த புகாரின்பேரில் நகர தி.மு.க. செயலாளர் ஆர்.ஜி.ரத்தினம், மருமகன் திலீப்குமார், சுரேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோதலில் மொத்தம் 100 பேர் மீது இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்- இன்ஸ்பெக்டர் தினகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment