பசும்பொன் முத்துராம லிங்கத்தேவரின் பிறந்தநாள் விழாவும், அவரது நினைவு நாள் விழாவும் அக்டோபர் 30-ந்தேதி வருகிறது. தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்தில் இந்த விழா நாளை தொடங்கி 30-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. நாளை (28-ந்தேதி) ஆன்மீக விழாவாகவும், 29-ந்தேதி அரசியல் விழாவாகவும், 30-ந்தேதி குரு பூஜை விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. தேவர் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு சார்பில் நாளை பசும்பொன் கிராமத்தில் புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்படுகிறது.
மாவட்ட கலெக்டர் அருண்ராய் இந்த கண்காட்சியை திறந்து வைக்கிறார். 29-ந்தேதி கோவை ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சொற்பொழிவு ஆற்றுகிறார். 30-ந்தேதி நடைபெறும் குருபூஜை விழாவில் லட்சக்கணக்கான தேவரின தொண்டர்கள் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அ.தி.மு.க. சார்பில் தமிழக அமைச்சர்கள், தி.முக. சார்பில் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. சார்பில் வைகோ, காங்கிரஸ் கட்சி சார்பில் தங்கபாலு, திருநாவுக்கரசர், பாரதீய ஜனதா சார்பில் இல.கணேசன், பொன்.ராதா கிருஷ்ணன், தே.மு.தி.க. சார்பில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளும் 30-ந்தேதி பசும்பொன் கிராமத்திற்கு வந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்கள்.
தேவர் ஜெயந்தி விழாவையொட்டி பசும்பொன் கிராமத்தில் ஸ்ரீதர்வாண்டை யார், டாக்டர் சேதுராமன், பி.டி.அரசக்குமார் ஆகியோ ரது சார்பில் தனித்தனியாக அன்னதான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் பேருக்கு மேல் அன்னதானம் வழங்கப்படுகிறது. தேவர் நினைவிடத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் செய்து வருகிறார்.
தேவர் ஜெயநதி விழாவையொட்டி மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பசும்பொன் கிராமத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment