நெல்லையில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் கூடன்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சி நிறுவனத்தலைவர் சீமான் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூடன்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ச்சியாக நடந்த பிறகும் மத்திய அரசு இதை கண்டு கொள்ளவே இல்லை. இந்த போராட்டத்தை திசைதிருப்ப மத்திய அரசு முயல்கிறது. இது ஒரு குறிப்பிட்ட பகுதிமக்களுக்கான போராட்டம் என்றும், வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று கொண்டு அணு உலையை எதிர்க்கிறார்கள் என்றும் வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள். இது அணு உலையை விட ஆபத்தானது.
மத்திய அரசுக்கு தமிழக மக்கள் உயிர் பற்றி கவலையில்லை. ஏற்கனவே தமிழக மீனவர்கள் கொலையில்,எல்லை தாண்டுகிறார்கள் என்று கூறி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படிப்பட்ட அரசு நாளை அணு உலை வெடித்தால் இந்த மக்களை எப்படி காப்பாற்றும்.
இப்போது தீவிரவாதிகளின் பார்வை கூடங்குளம் அணுமின்நிலையம் பக்கம்தான் உள்ளது. இந்த அணு உலை ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கான பேரழிவு. எனவே நாங்கள் அணுமின் நிலையத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். இது போன்ற அணு உலைகளை தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலாவது நிறுவ முடியுமா?. எனவே நாம் தமிழர் கட்சி இறுதி வரை மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக நிற்கும்.
அணு உலை பணிகளை நிறுத்தக்கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு அதனை கண்டுக்கவே இல்லை. அணு உலை போராட்டமானது குறிப்பிட்ட பகுதியில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும்.
விரைவில் சென்னை,கோவை, மதுரை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராகபோராட்டம் நடத்தப்படும்.
No comments:
Post a Comment