ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா அக்.30ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. எட்டு மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் கலெக்டர் அருண்ராய் கூறியதாவது: கடந்த முறை ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பை காட்டிலும், இந்த முறை இரண்டு மடங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. மாவட்ட, தாலுகா, கிராம அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட்டு, மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்படும். அக்., 28 முதல் 30ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும். பரமக்குடி, பசும்பொன்னில் கட்டுப்பாட்டு அறை செயல்படும். பிரச்னைக்குரிய கிராமங்களில் ஆயுத சோதனை நடத்தப்படும்.
சாலையோரங்களில் ஜல்லிகள் போடப்பட்டிருந்தால், முன்கூட்டியே அகற்றப்படும். 10 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 77 அசம்பாவித சம்பங்கள் நடந்துள்ளன. இதன்படி 36 இடங்கள் பதட்ட பகுதியாக கண்டறியப்பட்டுள்ளன. இங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும். ஐந்து இடங்களில் காலணி பாதுகாப்பு அறை அமைக்கப்படும், போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விழாவுக்கு வருபவர்கள் அனுமதிக்கப்படுவர், என்றார்.
கூட்டத்தில், கலெக்டர்கள் சகாயம்(மதுரை), பழனிச்சாமி(தேனி), ராஜாராமன்(சிவகங்கை), பாலாஜி(விருதுநகர்), மகேஸ்வரி(புதுக்கோட்டை), ஆஷிஷ்குமார்(தூத்துக்குடி), திருநெல்வேலி டி.ஆர்.ஓ., உமா மகேஸ்வரி, மற்றும் எட்டு மாவட்ட எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment