சென்னை; சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின்(சிஎம்டிஏ) அனுமதி பெறாத சரவணா ஸ்டோர், சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
தெற்கு ஆசியாவில் ஷாப்பிங் மால்கள் நிறைந்த இடங்களில் சென்னை தி.நகர் குறிப்பிடத்தக்கது.
இங்கு உள்ள வணிக நிறுவனங்கள் முறையான கட்டிட அனுமதி பெறாமல் இயங்கி வருகின்றன என்பது நீண்டநாளாக இருந்து வரும் புகார்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் பல்வேறு பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.
இவற்றின் மீது சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இறுதியாக கடந்த 2007-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில் 64 கடைகளை இடிக்க உத்தரவிடப்பட்டது.
இதை தவிர்க்க கடந்த ஆட்சியில் கடைகளை இடிப்பதை தவிர்க்க சட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே அவை இடிக்கப்படாமல் தடுக்கப்பட்டன. இப்போது அந்த சட்டம் முடிவுக்கு வந்து விட்டது.
இந்நிலையில் ஆட்சி மாற்றத்தின் விளைவாக முறையாக அனுமதி பெறாத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது,
அதன் அடிப்படையில் நேற்று இரவே இதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. அதிகாலை 4 மணிக்கு சைதாப்பேட்டை போலீஸ் உதவி ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்பு தொடர்பாக கூட்டம் நடைபெற்றது.
கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் போது எதிர்ப்பு எழும் என்பதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக நடைபெற்றது.
பின்னர் அதிகாலை 5 மணிக்கு மாநகராட்சி அதிகாரிகள், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் குழுவினர் போலீஸ் பாதுகாப்புடன் தி.நகர் விரைந்தனர்.
உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ், குமரன் சில்க்ஸ், ரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர், ரத்னா ஸ்டோர், ஜெயசந்திரன் டெக்ஸ்டைல், டெக்ஸ்டைல் இந்தியா உள்ளிட்டவற்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.
7 கடைகள் மீது சி.எம்.டி.ஏ., அதிகாரிகளும், 25 கடைகள் மீது மாநகராட்சி அதிகாரிகளும் சீல் வைத்துள்ளனர். அடுத்த கட்டமாக 32 கடைகளுக்கும் சீல்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டமாக சீல்வைக்கப்பட்ட கட்டிடங்கள் உரிமையாளர்கள் தங்கள் கட்டிடத்தில் அனுமதி பெறாத பகுதிகளை இடிக்க வேண்டும். அதன்பின்னரே அவை இயங்க அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது.
ஊழியர்கள் பதற்றம்
32 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் அந்த கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர். கடைகள் தொடர்ந்து இயங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இடிப்பதற்கு உச்சநீதிமன்றம் சென்று தடைவாங்குவது குறித்து வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment