நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் பரமத்தி வேலூர் 4 ரோடு அருகே கடந்த 24-ந்தேதி நடந்தது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில தலைமை நிலைய பேச்சாளர் பேராவூரணி அருகே உள்ள களனிவாசலை சேர்ந்த திலீபன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது இந்திராகாந்தி மற்றும் ராஜீவ்காந்தியின் கொலைக்கு காரணமானவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்திதான் என்றும், ராஜீவ்காந்திதான் இலங்கைக்கு இந்திய அமைதி படையை அனுப்பி ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காரணம் என பேசியுள்ளார்.
இதை கண்டித்தும், திலீபனை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் வி.எஸ்.பரமசிவம் பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அருகே ஒரு விடுதியில் தங்கியிருந்த திலீபனை, பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபால் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரை பரமத்தி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி நந்தினிதேவி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் நாமக்கல் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment