ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நவம்பர் 8-ந்தேதி இரவு தமிழ் ஈழ மக்களுக்கு மேலும் ஓர் துன்ப இரவாக ஆகிவிட்டது. ஆம், தமிழ்ஈழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவரும், பிரான்ஸ் நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளருமான கேணல் பரிதி என்ற நடராஜா மதீந்திரன், பாரீஸ் நகரத்தில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது 8-ந்தேதி இரவில் கொலைகார நயவஞ்சகர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி என் இதயத்தில் ஈட்டியாக பாய்ந்தது.
நான் உயிராக நேசித்த விடுதலைப்புலிகளின் தளகர்த்தர்களுள் பரிதியும் ஒருவர் ஆவார். 1989-ம் ஆண்டு தொடக்கத்தில் வன்னிக் காடுகளில் இடைவிடாத இந்திய- சிங்கள ராணுவத் தாக்குதல்களுக்கு நடுவே வான்வெளிக் குண்டு வீச்சுக்கும், பீரங்கி தாக்குதல்களுக்கும் ஊடே நான் எனது உயிரினும் மேலாக போற்றுகின்ற மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களோடு இருந்த என் வாழ்வின் பொன்னான அந்த நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளை எல்லாம் கடந்த ஆண்டு மே 30-ந்தேதி பாரீஸ் நகரத்தில் நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்களை, நான் சந்திக்க ஏற்பாடு செய்து தந்த நிகழ்ச்சியின்போது உணர்ச்சி பூர்வமாக நினைவு கூர்ந்ததை எண்ணும்போது மனம் பாறையாக கனக்கிறது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்சில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கடந்த ஆண்டு ஜுன் 1-ந்தேதி நடைபெற்ற ஈழத்தமிழர் கருத்து அரங்கத்தில் பங்கு ஏற்கச் சென்ற நான், மே 30-ந்தேதி பாரீஸ் நகரத்துக்கு சென்றேன். அங்குதான் ஈழத்தமிழர்களை நான் சந்திக்க சகோதரர் பரிதி ஏற்பாடு செய்து இருந்தார். இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அந்த சந்திப்பு நடந்தது. பரிதியின் துணைவியாரையும், மகனையும், மகளையும் கண்டு உரையாடினேன்.
ஈழத்தில் நான் தலைவரோடு தங்கியிருந்தபோது வன்னிக் காட்டின் வேறொரு பகுதியில் பரிதி செயல்பட்டார். 1990-ம் ஆண்டு யுத்தத்தில் காயமுற்று கால் நடக்க முடியாத நிலையில் சென்னைக்கு வந்து சிகிச்சை பெற்றார். பின்னர் பிரான்ஸ் நாட்டின் புலிகளின் பொறுப்பாளர் ஆக்கப்பட்டார்.
பிரான்சு நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டபின் பரிதி கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இயக்கத்தின் பல முயற்சிகளால் அவர் விடுதலை ஆனார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை இனவாத அரசின் உளவுத்துறையின் பின்னணியில் கொடி யோரால், ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகாயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று மீண்டார்.
இவ்வாண்டு மாவீரர் நாள் நிகழ்ச்சிகளை முனைப்பாக ஏற்பாடு செய்துவந்த நிலையில் கேணல் பரிதி நிராயுதபாணியாக அலுவலக்தை விட்டு வெளியே வந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கை அரசின் புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சகமாக கொடுஞ்செயலால் ஒரு வீரச் சகோதரனை தமிழ் ஈழம் இழந்துவிட்டது.
பரிதியின் துணைவியாரையும், அவரது பிள்ளைகளையும் எண்ணுகையில் தாங்க முடியாத துக்கம் மேலிடுகிறது. அந்த வீரத் திருமகனுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கண்ணீர் அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சமர்ப்பிக்கிறேன்.
தலைமைக்கும், இயக்கத்துக்கும் தமிழ்ஈழ விடுதலை லட்சியத்திற்கும், தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாவீரன் பரிதி, எந்தக் குறிக்கோளுக்காக இறுதி மூச்சு அடங்கும் வரை போராடினாரோ, அந்த சுதந்திரத் தமிழ்ஈழ லட்சியத்தை வென்றெடுக்க துயர் சூழ்ந்த இந்த நேரத்தில் சபதம் ஏற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment