Monday, March 25, 2013

கோவில்பட்டியில் 144 தடை உத்தரவு

கோவில்பட்டியில் முத்துராமலிங்கத் தேவர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக, 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து சாலை மறியல் நடைபெற்றது. மேலும், இரு தரப்பினரிடையே மோதலும் ஏற்பட்டது. கல்வீச்சில் அரசு பஸ்கள் சேதமடைந்தன. இதையடுத்து, பிரச்னைக்குரிய சில இடங்களில் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




கோவில்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே சங்கரலிங்கபுரத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலையை சிலர் சனிக்கிழமை சேதப்படுத்தினர். இதையடுத்து, கோவில்பட்டியில் ஆங்காங்கே சாலை மறியல், கடையடைப்புப் போராட்டங்கள் நடைபெற்றன.



தென்மண்டல ஐ.ஜி. அபய்குமார் சிங், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சுமித்சரண், எஸ்.பி.க்கள் ராஜேந்திரன் (தூத்துக்குடி), விஜயேந்திர பிதரி (திருநெல்வேலி) ஆகியோர் தலைமையிலான போலீஸார் கோவில்பட்டியில் முகாமிட்டு அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டனர். சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.



இந்நிலையில், குமரி மாவட்டம், மயிலாடியில் இருந்து கொண்டுவரப்பட்ட புதிய சிலை அதே இடத்தில் ஞாயிற்றுக்கிழமை நிறுவப்பட்டது. இதையடுத்து, அதிகாலை 6 மணி முதல் நகருக்குள் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.



இதற்கிடையே, சங்கரலிங்கபுரத்தில் மேலத் தெரு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கல் வீசி தாக்கிக் கொண்டனர். இதில் இருதரப்பையும் சேர்ந்த சிலர் காயமடைந்தனர். சில வீடுகளும் சேதமடைந்தன.



இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. உயர்ந்த கட்டடங்களின் மாடியில் போலீஸார் நிறுத்தப்பட்டு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.



மற்றொரு தரப்பினர் மறியல்: இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, கோவில்பட்டி- எட்டயபுரம் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேவர் சிலையை சேதப்படுத்திய உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்; கைது செய்யப்பட்ட 11 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.



கோவில்பட்டி கோட்டாட்சியர் கதிரேசன், வட்டாட்சியர் ரமேஷ் ஆகியோர் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.



இந்நிலையில், மாலை சுமார் 4 மணியளவில் அம்பேத்கர் சிலை அருகே அதே தரப்பினர் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் விரைந்து சென்று, சாலை மறியலைக் கைவிடும்படி போராட்டக் குழுவினரிடம் கேட்டுக் கொண்டனர். அப்போது, போராட்டக் குழுவினர் திடீரென கல் வீச்சில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தி, மறியலில் ஈடுபட்டோரை கலைந்துபோகச் செய்தனர்.



இதைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் சென்ற சிலர், கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த கார் கண்ணாடி, பசுவந்தனை சாலையில் அரசு உதவி பெறும் பள்ளி எதிர்புறம் உள்ள வங்கியின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடிகள் மீது கல் வீசி சேதப்படுத்தினர். அப்பகுதிகளில் திறந்திருந்த கடைகளையும் மூடுமாறு மிரட்டிவிட்டுச் சென்றனராம். கோவில்பட்டி தீயணைப்பு நிலையம் அருகே சென்று கொண்டிருந்த அரசு பஸ் மற்றும் வேலாயுதபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீதும் கல் வீசப்பட்டு, கண்ணாடிகள் சேதமடைந்தன.



144 தடை உத்தரவு: இதற்கிடையே, பிரச்னைக்குரிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டியையடுத்த சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம், கோவில்பட்டி - சாத்தூர் சாலை, கோவில்பட்டி நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஊர்வலம், கூட்டங்கள் உள்ளிட்ட நோக்கங்களின் அடிப்படையில் கோவில்பட்டி நுழைவாயிலில் வெளிநபர்கள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளதாக கோட்டாட்சியர் கதிரேசன் தெரிவித்துள்ளார்.

.

No comments: