Monday, March 11, 2013

ராஜபக்சேவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சென்னையில் உண்ணாவிரதம் இருந்து கைதான லயோலா மாணவர்களுக்கு ஆதரவாக திருச்சி ஜோசப் கல்லூரி மாணவர்கள் இன்று காலை 10 மணியளவில் கல்லூரி வாசலில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.




மாணவர்கள் மணிகண்டன், திவாகர், மூர்த்தி, ரத்தினவேல், யோகேஷ், குணசேகரன், இன்பென்ட் பீட்டர், அருண்குமார், ராஜ்குமார், கனகராஜ், செல்வம் ஆகிய 11 பேரும் தொடர் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தனர். இவர்களுக்கு ஆதரவாக 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ணாவிரத பந் தலில் அமர்ந்தனர்.



வேலூர் ஊரீசு கல்லூரி மாணவர்கள் இன்று சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். கல்லூரி வளாகத்தில் நடந்த உண்ணாவிரதத்துக்கு 3-ம் ஆண்டு மாணவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். 50 மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.



பொன்னேரி எல்.என்.ஜி. கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் அனைவரும் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சென்னை லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் 100-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வாசலில் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது சென்னையில் உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை இரவோடு இரவாக அப்புறப்படுத்தியதற்கு கண்டணம் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.



மன்னார்குடியில் ராஜ கோபால சுவாமி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 2,500 பேர் இன்று வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

சமீபத்தில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, ராஜபக்சேவை சந்தித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவ பொம்மையை எரித்தனர்.



இதேகோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறை தனியார் கல்லூரி மற்றும் பூம்புகாரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கல்லூரி மாணவ, மாணவிகளும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



நெல்லை எப்.எக்ஸ்.பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல் அம்பை கலைக்கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



ஈரோடு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாணவர் தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் 1500 மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.



சென்னை லயோலா கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வற்புறுத்தியும் புதுவை சட்டக் கல்லூரி மாணவர்கள் 20 பேர் பஸ் நிலையம் எதிரே இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.

No comments: