Tuesday, March 26, 2013

கோவில்பட்டியில் 144 தடை உத்தரவு மேலும் ஒரு நாள் நீட்டிப்பு

முத்துராமலிங்கத் தேவர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக, கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.




மேலும், அரசு பஸ்ûஸ கல்வீசி சேதப்படுத்தியதாக 3 பேர் உள்பட 7 பேரை பேலீஸார் கைது செய்துள்ளனர். கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில் உள்ள தேவர் சிலையை சிலர் சனிக்கிழமை சேதப்படுத்தினர். இதையடுத்து, சனிக்கிழமை ஆங்காங்கே சாலை மறியல், கடையடைப்பு நடைபெற்றது. பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.



ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் பஸ் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கின. இருப்பினும் காலை 11 மணிக்கு மேல் சங்கரலிங்கபுரம் பகுதியில் கல் வீச்சு சம்பவம் நடைபெற்றது. தொடர்ந்து, கோவில்பட்டி புதுரோடு அம்பேத்கர் சிலை அருகே சாலை மறியல் நடைபெற்றது.



மாலையில் மீண்டும் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், போராட்டக் குழுவினர் கல்வீச்சில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போலீஸார் லேசான தடியடி நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதையடுத்து, கோவில்பட்டி கோட்டாட்சியர் கதிரேசன் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் 24 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.



இந்நிலையில் திங்கள்கிழமை காலை முதல் சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம் மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியது. தென்மண்டல ஐ.ஜி. அபய்குமார்சிங், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சுமித்சரண், எஸ்.பி.க்கள் ராஜேந்திரன் (தூத்துக்குடி), விஜயேந்திரபிதரி (திருநெல்வேலி), மணிவண்ணன் (கன்னியாகுமரி), ஜெயச்சந்திரன் (திண்டுக்கல்), சக்திவேல் (சிவகங்கை) ஆகியோர் தலைமையிலான போலீஸார், கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு, எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் இருக்க பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.



இந்நிலையில், புளியம்பட்டியிலிருந்து கோவில்பட்டிக்கு வந்து கொண்டிருந்த அரசு பஸ் மீது, துரைச்சாமிபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கல் வீசினர். இதில் பஸ் ஓட்டுநர் சீனிவாசராகவன் (42) மற்றும் பஸ்ஸில் இருந்த பள்ளி மாணவிகள் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.



காயமடைந்த மூவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து, கல்வீச்சில் ஈடுபட்டதாக பாளையங்கோட்டை சிவந்திப்பட்டியைச் சேர்ந்த சந்தானம் மகன் சுபாஷை (36) கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய பெருமாள்சாமியை தேடி வருகின்றனர்.



சமாதானக் கூட்டம்: இந்நிலையில், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அமிர்தஜோதி தலைமையில், சமாதானம் மற்றும் நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது.



கூட்டத்தில், கோவில்பட்டி கோட்டாட்சியர் கதிரேசன், வட்டாட்சியர் ரமேஷ், காவல் துறை அதிகாரிகள் மற்றும் இருதரப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், இறந்த நபர்களை அடக்கம் செய்ய ஊர்வலம் செல்லும்போது, மற்றவர்களது மனதை புண்படுத்தாத வண்ணம் நடந்து கொள்வது, பூக்களை வீடுகள் மீது வீசுவது போன்றவைகளை இருதரப்பினரும் செய்வதில்லை என உறுதிமொழி அளித்தனர்.



விழா காலங்களில் மஞ்சள் நீராட்டு விழா நடத்துவதோ, பிற நபர்கள் மீது மஞ்சள் நீரை தெளிப்பதோ கூடாது. இதனை ஆட்சேபித்தால், இனி வரும் காலங்களில் மஞ்சள் நீராட்டு விழா நடத்தக் கூடாது என்றும், காவல் துறை மூலம் அனுமதி வழங்கக் கூடாது எனவும் முடிவெடுக்கப்பட்டது.



திருமண நிகழ்ச்சி மற்றும் ஈமக் கிரியை போது வெளியூர் நபர்கள் பிரச்னைக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வது என்றும், மேலும் பிரச்னை ஏற்பட்டால் அந்தந்த சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் தலையிட்டு பேசி தீர்த்துக் கொள்வது என்றும் இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். தற்போதைய பிரச்னையில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணையில் உள்ள படிக்கும் மாணவர்களான சிவா, விஜயக்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகிய மூவரையும் விடுவிக்க கோரப்பட்டது.



இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சங்கரலிங்கபுரம் பகுதியில் அரசு தரப்பில் ஒரு நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.



144 தடை உத்தரவு நீட்டிப்பு: இந்நிலையில், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வந்த 144 தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கோட்டாட்சியர் கதிரேசன் தெரிவித்துள்ளார்.



6 பேர் கைது: செங்கோட்டையிலிருந்து கோவில்பட்டிக்கு வந்து கொண்டிருந்த அரசு பஸ்ûஸ கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், கல் வீசி சேதப்படுத்தினர். இதுதொடர்பாக கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த சுப்பையா மகன் சுடலைமணி (24) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மக்காளிப்பாண்டி மகன் ஆறுமுகப்பாண்டி(26) ஆகிய இருவரையும் கோவில்பட்டி மேற்கு போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மாரியப்பனை தேடி வருகின்றனர்.



மேலும், சங்கரலிங்கபுரம் அருகே சந்தேகத்துக்குரிய இடத்தில் ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், மூப்பன்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன், மதன்குமார், மகேஸ்வரன் என்ற மாரீஸ்வரன், கண்ணன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, 4 பேரையும் கைது செய்தனர்.



மேலும், திங்கள்கிழமை இரவு விளாத்திகுளத்தில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த அரசு பஸ் மீது தொழிற்பேட்டை அருகே மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் கல்வீசினராம். இதில் அரசு பஸ் ஓட்டுநர் முத்துராமன் (34) காயமடைந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

.

No comments: