Tuesday, March 19, 2013

இலங்கை பிரச்சினைக்காக மதுரை வாலிபர் தீக்குளித்து தற்கொலை

மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்த இடத்திற்கு நேற்று இரவு 7 மணிக்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் தலையில் கறுப்பு நிறத்தில் மங்கி குல்லா அணிந்து இருந்தார். ஜீன்ஸ் பேண்ட்டும், உயரம் குறைவான சட்டையும் போட்டிருந்தார். அவர் கையில் ஒரு பை வைத்திருந்தார்.




நேற்று அவர் தேவர் சிலை பகுதியில் பாலம்ரோடு அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கிற்கு சென்றார். அங்கு ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் வாங்கினார். பின்னர் அங்கிருந்து எதிரே கல்பாலம் ரோட்டுக்கு அருகே உள்ள இன்னொரு பெட்ரோல் பங்க் பகுதிக்கு வந்தார். அங்கு திடீரென்று தான் ஏற்கனவே வாங்கி வந்திருந்த பெட்ரோலை தன் உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அப்போது அவர் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக கோஷமிட்டதாக, அருகில் இருந்த சிலர் தெரிவித்தனர்.



பெட்ரோல் பங்க் அருகே அவர் தீக்குளித்ததால் அங்கு வேலை செய்த ஊழியர்கள் செந்தில்குமார், ஆரோக்கியராஜ் அவரை சற்று தள்ளி தீயை அணைக்க முயன்றனர். இதில் ஆரோக்கியராஜின் இரு கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது.



தகவல் கிடைத்ததும் தல்லாகுளம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் வருவதற்குள் அந்த வாலிபர் தீயில் கருகி பரிதாபமாக இறந்து போனார். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தற்கொலை செய்த வாலிபரின் உடல் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.



பெட்ரோல் பங்க் ஊழியர் ஆரோக்கியராஜ் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.



தற்கொலை செய்த வாலிபர் நாகரிகமான முறையில் உடை அணிந்திருந்தார். எனவே அவர் கல்லூரி மாணவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர் அணிந்திருந்த மங்கி குல்லாவில் ஜி.ஆர்.மணி என்று எழுதப்பட்டிருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். அவர் வைத்திருந்த பையில் மதுரை வைகை வடகரை ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் என்று எழுதப்பட்டிருந்தது. அதனுள் நவீன மாடலான அலுமினிய தட்டுகள் இருந்தன. அவற்றை வைத்து அவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments: