Sunday, January 1, 2012

எம்.ஜி.ஆரை வைத்து 16 படங்கள் எடுத்த தேவர்

'கொங்கு நாட்டுத் தங்கம்' படத்தை அடுத்து, 'தாய் சொல்லைத் தட்டாதே' என்ற படத்தைத் தயாரிக்க சின்னப்பா தேவர் திட்டமிட்டார். அதற்கான கதை -வசனத்தை ஆரூர்தாஸ் எழுதி முடித்துவிட்டார்.
இந்தப் படத்திற்கான பாடல்கள், சாரதாஸ் ஸ்டூடியோவில் பதிவாகிக் கொண்டிருந்தன. தேவர் அங்கே இருந்தார்.


அப்போது ஒரு படப்பிடிப்புக்காக, எம்.ஜி.ஆர். அங்கே வந்தார். தேவரும், எம்.ஜி.ஆரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். இருவரும் ஒரு கணநேரம் திகைத்து நின்றனர். பின்னர் கட்டித்தழுவிக் கொண்டனர். சுமார் 4 ஆண்டுகள் பிரிந்திருந்த நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தனர்.

தேவர் பிலிம்ஸ் படங்களில் தொடர்ந்து நடிக்க எம்.ஜி.ஆர். சம்மதித்தார். 'தாய் சொல்லை தட்டாதே' படத்தில் எம்.ஜி.ஆரையும், சரோஜாதேவியையும் நடிக்க வைக்க தேவர் தீர்மானித்தார். எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி, கதை- வசனத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

'தாய் சொல்லை தட்டாதே' படம் ஒரே மாதத்தில் தயாராகியது. 7-11-1961-ல் வெளியான இப்படம் நூறு நாள் ஓடியது. இதை அடுத்து 'தாயைக் காத்த தனயன்' படத்தை தேவர் தயாரித்தார். இந்தப் படத்திலும் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி நடித்தார். இந்தப்படம் 20 நாட்களில் தயாராகி வெற்றி பெற்றது.

பின்னர் குடும்பத்தலைவன், தர்மம் தலைகாக்கும், நீதிக்குப்பின் பாசம், வேட்டைக்காரன், தொழிலாளி, கன்னித்தாய், முகராசி, தனிப்பிறவி, தாய்க்குத் தலைமகன், விவசாயி, தேர்த்திருவிழா, காதல் வாகனம், நல்ல நேரம் ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

எம்.ஜி.ஆரை வைத்து குறுகிய காலத்தில் வெற்றிப் படங்களை எடுத்தவர் என்ற பெயர் தேவருக்கு கிடைத்தது. தேவர் பிலிம்ஸ் தயாரித்த 16 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். எம்.ஜி.ஆரை வைத்து அதிகப்படங்கள் தயாரித்தவர் தேவர்தான்.

குறுகிய காலத்தில் நிறைய படங்களில் நடித்தது, எம்.ஜி.ஆருக்கும் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தியது. 'நாடோடி மன்னன்' படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, எம்.ஜி.ஆரை நெருங்கவே பட அதிபர்கள் பயந்தனர். இனி எம்.ஜி. ஆர். பிரமாண்டமான படங்களில்தான் நடிப்பார். அவரேதான் டைரக்ட் செய்வார்' என்றெல்லாம் கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது.

இதை பொய்யாக்க, குறைந்த பட்ஜெட் படத்திலும் நடிக்கலாம் என்று எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். நடிகை மாலினி நடித்த 'சபாஷ் மாப்பிள்ளே' என்ற படத்தில் நடித்தார். அந்தப்படமும், அதன் பிறகு நடித்த 'மாடப்புறா' என்ற படமும் சரியாக ஓடவில்லை.

இந்த சமயத்தில்தான் தேவருடன் நட்பைப் புதுப்பித்துக் கொண்டு, தேவர் பிலிம்ஸ் படங்களில் நடிக்கலானார். அவை குறைந்த செலவில், குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றன.

இதன் காரணமாக, 'எம்.ஜி.ஆர். குறித்த காலத்தில் படத்தை முடிக்க பட அதிபருக்கு ஒத்துழைப்பார்' என்ற பெயர் பரவியது. பட அதிபர்களுக்கு எம்.ஜி.ஆர். ஒத்துழைப்பு தருவதில்லை என்ற வதந்தி பொய்யாகியது.

கோடம்பாக்கத்தில் தொடங்கப்படும் படக்கம்பெனிகளில் பெரும்பாலானவை, பூஜை போடுவதோடு சரி; சில கம்பெனிகள், பாதி படத்தோடு, பணத்தட்டுப்பாடு காரணமாக கம்பெனியை மூடிவிடுவார்கள். சிலர், படம் ரிலீஸ் ஆன பிறகும், நடிகர்- நடிகைகளுக்கு பேசிய பணத்தை கொடுக்கமாட்டார்கள்.

இதில் முற்றிலும் மாறுபட்டவராக தேவர் விளங்கினார். நடிகர்- நடிகைகளுக்கு பேசிய பணத்தை, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஒரே தவணையில் மொத்தமாக கொடுத்து விடுவார். மற்ற கலைஞர்கள், ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட தேதியில் சம்பளம் கிடைக்கும்.

எம்.ஜி.ஆரைப் பொறுத்த வரை, படத்துக்கு உரிய பணத்தை மொத்தமாகக் கொடுப்பதுடன், அடுத்த படத்துக்கு உரிய பணத்தையும் சேர்த்துக்கொடுத்து விடுவார், தேவர். அதாவது, ஒரு படத்துக்கான தொகை அட்வான்சாகவே இருந்து கொண்டிருக்கும்.

இதன் காரணமாக ஒரு படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் அன்றே, அது ரிலீஸ் ஆகும் தேதியையும் தேவர் அறிவித்து விடுவார். அதே தேதியில் படம் நிச்சயம் ரிலீஸ் ஆகிவிடும்.

தேவர் படங்களிலேயே எம்.ஜி.ஆர். நடித்துக்கொண்டிருந்த போது, சில பெரிய படக்கம்பெனி அதிபர்கள், எம்.ஜி.ஆரை அணுகி, தங்களுடைய படங்களிலும் நடிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். அவர்களுக்கும் `கால்ஷீட்' கொடுக்கவேண்டிய கட்டாயம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.

எனவே, எம்.ஜி.ஆர். இல்லாமல் சில படங்களைத் தயாரிக்க தேவர் முடிவு செய்து, அதற்கென்றே 'தண்டாயுதபாணி பிலிம்ஸ்' என்ற படக்கம் பெனியைத் தொடங்கினார். இந்தப் படக்கம்பெனி சார்பில் பல்வேறு படங்கள் தயாரிக்கப்பட்டாலும், பக்தி கலந்த சமூகப்படங்கள் பெரிய வெற்றி பெற்றன.

இவற்றில் ஏவி.எம்.ராஜன், சவுகார்ஜானகி நடித்த துணைவன் (1969), ஜெமினிகணேசன், கே.ஆர்.விஜயா நடித்த 'தெய்வம்' (1972), சிவகுமார், ஜெயசித்ரா நடித்த 'வெள்ளிக்கிழமை விரதம்' (1974) ஆகியவை மாபெரும் வெற்றிச் சித்திரங்கள்.

'தெய்வம்' படத்தில், பக்தர் பிரமுகர் கிருபானந்தவாரியார் நடித்தார். குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைப்பில், பெங்களூர் ரமணி அம்மாள், மதுரை சோமு, டி.எம்.சவுந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகிய இசைக் கலைஞர்கள் பாடினார்கள்.

எம்.ஜி.ஆருக்கும், தேவருக்கும் இருந்த நட்பு ஆழமானது. எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அவர் பிழைத்து வீடு திரும்புவாரா, மீண்டும் படங்களில் நடிப்பாரா என்று பட அதிபர்கள் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தபோது, தேவர் அகஸ்தியர் கோவிலில் பூஜை செய்துவிட்டு பிரசாதத்தை எம்.ஜி.ஆரிடம் கொண்டுபோய் கொடுத்து, 'முருகா! என் அடுத்த படத்தில் நீங்கள்தான் நடிப்பீர்கள். இதோ அட்வான்ஸ்!' என்று கூறியபடி லட்சக்கணக்கில் பணம் கொடுத்துவிட்டு வந்தார்.

தேவரின் அன்பைக் கண்டு மனம் நெகிழ்ந்தார், எம்.ஜி.ஆர்.

No comments: