தேர்வுகள் நெருங்கி வருவதை ஒட்டி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகல் உள்ள டி.வி.களில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடப்பு கல்வியாண்டில் விடுதியில் தங்கிப் பயிலும் 95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதிகள் உள்ளன. அந்த விடுதிகளில் 77 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். கிராமப்புறங்களில் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள மாணவர்கள் இந்த விடுதிகளால் பயன்பெற்று வருகின்றனர்.
தொலைக்காட்சிகளுக்குத் தடை: மாணவர்களின் பொழுதுபோக்கிற்காக பெரும்பாலான விடுதிகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நெருங்கிவிட்ட காரணத்தால் தொலைக்காட்சிப் பெட்டிகளை இயக்கக் கூடாது என்று விடுதி நிர்வாகிகளுக்கு தமிழக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நடப்பு கல்வியாண்டில் 95 சதவீத தேர்ச்சியை எட்டுவதற்கும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்புப் பயிற்சி: விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களின் கற்கும் திறனுக்கு ஏற்ப அவர்களை மூன்று வகையாகப் பிரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களை "ஏ' வகையாகவும், 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எனில் "பி' வகையாகவும், 40 சதவீதத்துக்கு குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்களை "சி' வகையாகவும் பிரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதில், "ஏ' பிரிவு மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சிகளை அளித்து அவர்கள் அதிக மதிப்பெண்களை பெற வழிசெய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மாணவர்களுக்குப் பள்ளிகளில் அளிக்கப்படும் பயிற்சிகளுடன் சிறப்புப் பயிற்சிகளை கொடுக்க வேண்டும் என விடுதி காப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கூடுதல் இடங்கள் ஒதுக்க நடவடிக்கை: விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட இடங்களுடன் மேலும் 10 சதவீதம் அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதை ஒவ்வொரு கல்வியாண்டும் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்ற முடிவை அரசு எடுக்கவுள்ளது.
வருமானச் சான்று எப்போது தேவை? விடுதிகளில் விண்ணப்பிக்கும் போதே குடும்பத்தின் வருமானச் சான்றினை அளிக்க வேண்டும் என்ற விதி இப்போது உள்ளது. அதைத் தளர்த்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, விடுதியில் சேர தேர்வு செய்யப்பட்ட பின் வருமானச் சான்று அளித்தால் போதுமானது என்ற முடிவை அரசு எடுத்துள்ளது.
இதன்மூலம், விண்ணப்பிக்கும் போதே வருமானச் சான்றைப் பெற மாணவர்கள் அலைய வேண்டிய அவசியம் இருக்காது. விடுதியில் சேருவது கட்டாயம் என்று தெரிந்த பிறகே அந்தச் சான்றினை அளித்தால் போதும் என அரசுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment