தஞ்சாவூரில், மருதப்பா அறக்கட்டளை சார்பில் நடந்து வரும் தமிழர் கலை இலக்கியத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் (சசிகலா) பேசியதாவது: இந்த விழாவுக்கு, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ணமோகன்ஜி வந்துள்ளார். இது போல், இந்தியா முழுவதும் உள்ள என் நண்பர்களை அழைத்தால் தாங்க மாட்டார்கள்; இனிமேல் அனைவரையும் அழைப்பேன். இனி, நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன். ஒன்று பழ.நெடுமாறனுக்கு கட்டுப்படுவேன்; இரண்டாவது என் மனைவிக்கு கட்டுப்படுவேன். தன் மகள் திகார் சிறையில் இருந்து விடுபட, முல்லைப் பெரியாறு பிரச்னையில் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க கருணாநிதி தயங்குகிறார். காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, இலங்கைத் தமிழர் பிரச்னை என, அனைத்து பிரச்னைகளிலும், தமிழகத்துக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்துள்ளது. கருணாநிதி, காங்கிரஸ் உறவை விலக்கிக் கொண்டால் தமிழகம் வாழ்த்தும்; இல்லையென்றால் உங்களை வீழ்த்தும். நீங்கள், "முடிவெடு' என்கிறீர்கள். நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது. அதை மாற்றியது மக்கள். மக்கள் சக்தியை திரட்டினால் மாற்றம் வரும். வரும் எம்.பி., தேர்தலிலும் அது எதிரொலிக்கும். முடிவு எடுத்துவிடலாம். அதனால், தமிழகத்தின் பொது நலனுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. என் மனைவி மீது வழக்கு உள்ளது; அதனால், பொறுமையாக இருக்கிறேன். தற்போதுள்ள இடர்பாடுகளை பார்த்து, யாரும் அச்சப்பட வேண்டாம். மற்றவர்களை போல் பொறுப்பற்ற முறையில் என்னால் பேச முடியாது; அவசரப்பட முடியாது. "என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே... இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே!' இவ்வாறு நடராஜன் பேசினார். இனி, சொந்த காரை பயன்படுத்தாமல், பொது காரை பயன்படுத்துவதாகவும், தூக்கு தண்டனையை, இந்தியாவில் ரத்து செய்ய வலியுறுத்தி, கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடை பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் நடராஜன் தெரிவித்தார்.
தஞ்சை அருகே, விளார் ரோட்டில் அமைக்கப்பட்டு வரும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்துக்காக, நடராஜனுக்கு சொந்தமான ரோலக்ஸ் வாட்ச், நிசான் கார், என்டோவர் கார், சொனாட்டா கார் ஆகியவற்றை, மேடையில், 45 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து, அந்த பணம், பழ.நெடுமாறனிடம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment