நான் தீவிர காங்கிரஸ்காரன் என திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கூறினார்.
மாநில ஐஎன்டியுசி பொதுச்செயலரும், காங்கிரஸ் மாநிலத் துணைத்தலைவருமான கே.எஸ்.கோவிந்தராஜன் எழுதிய "திரும்பிப் பார்க்கிறேன்' நூல் வெளியீட்டு விழா மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் நூல் முதல் படியை பெற்றுக்கொண்ட அவர் பேசியதாவது:
""வயது மட்டுமே மனிதர்களை நிதானமாக வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. எனது தாத்தா, தந்தையர் என பாரம்பரியமாகவே காங்கிரஸ்காரர்கள். எனக்கு கட்சியுடன் முரண்பாடு ஏற்பட்டிருக்கலாம். தாய், தந்தைக்கு இடையேயும், சகோதரர்களுக்கு இடையேயும் முரண்பாடு ஏற்படாமல் இருக்குமா? கருத்து மாறுபாட்டால் முரண்பட்டு மோதலாம்.
தமிழகத்தில் மூன்று முதலமைச்சர்களோடு நான் முரண்பட்டிருக்கிறேன். ஆகவே காங்கிரஸ் எனும் பாரம்பரியத்தில் நம் நாட்டு கலாசாரத்தோடு வாழ்ந்துவரும் சோனியா காந்தி படம் பொறித்த அழைப்பிதழில், எனது படத்தையும் பொறித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். மறைந்த மூப்பனார் எனது மதிப்புக்குரியவர்.
நான் தீவிர காங்கிரஸ் கட்சிக்காரனாக கடந்த 1957 முதல் 1962-வரையில் இருந்தேன். காங்கிரஸ் வேட்பாளருக்காக மேடையில் ஏறி தீவிரப் பிரசாரத்திலும் ஈடுபட்டேன். எனது தாயின் நகைகளை விற்று காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தவர் எனது தந்தை.
பெருந்தலைவர் காமராஜர் தேர்தலில் தோற்றபோது, எனது வீட்டில் மூன்று நாள் உணவு சமைக்கவில்லை. அந்த அளவுக்கு காமராஜர் தோல்விக்காக எனது தந்தை வருத்தப்பட்டார். நான் அரசியல்வாதியாகியிருப்பேன். காமராஜர் தோல்வியே என்னை அரசியலுக்கு வரக்கூடாது என முடிவெடுக்கவைத்தது. அவரைத் தோற்கடித்துவிட்டார்களே என்ற ஆதங்கம் ஏற்பட்டது.
நான் கலைஞன். மென்மையானவன். ஆகவே எல்லோரிடமும் பற்றும், பாசமும் கொண்டுள்ளேன். என்னை அரசியலுக்கு வருமாறு தமிழகத்தின் மூன்று முதலமைச்சர்களும் அழைத்தனர். ஆனால் வர மறுத்துவிட்டேன். காமராஜர், கக்கன் போன்றோரை நேசித்தேன். ஜீவானந்தம், கல்யாணசுந்தரம் போன்றோரை யோசித்தேன். பெரியார், அண்ணா போன்றவர்களை வாசித்தேன்.
காமராஜரும், மூப்பனாரும் காழ்ப்புணர்ச்சி இல்லாத, வாய்ப்பு வந்தும் பொறுப்புகளை தூக்கியெறியும் நாகரிகம் நிறைந்த, தன்மானமிக்கவர்களாக இருந்தனர். வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. திரைப்பட மாயையில் நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.
தாய்வீடு, மொழி, இனம் காணாமல் போக அனுமதிக்க விடக்கூடாது. அவை காணாமல் போவது தாயைத் தொலைப்பது போன்றதாகும். ஆகவே மக்கள், மொழிக்கு ஏதாவது ஆபத்து எனில் காங்கிரஸ் தலைவர்களாகிய நீங்கள்தான் காப்பாற்றவேண்டும். அது உங்கள் கடமை.
தமிழன் எல்லாவற்றையும் இழக்கக்கூடாது. அதற்குண்டான பலம் காங்கிரஸ்காரர்கள் கையில்தான் உள்ளது.
இப்போதெல்லாம் நாம் முன்பு பார்த்த பொன்வண்டு, அத்திப்பழம், சிட்டுக்குருவி ஆகியவற்றை பார்க்க முடியவில்லை. காலமாற்றத்தில் எதுவும் வெற்றி பெற முடியாது.
ஆகவே எதிர்ப்பு சக்தியைக் காட்டாவிட்டால் எதிலும் வெற்றி பெறமுடியாது. அந்த எதிர்ப்பு சக்தியைக் காட்டியே காங்கிரஸ் தலைவர்கள் மக்களுக்கு பணியாற்ற வேண்டும்'' என்றார்.
No comments:
Post a Comment