USEFUL BLOG FOR ALL MUKKULATHORS AND INFORMATIONS REGARDING MUTHURAMALINGA THEVAR, ACTOR KARTHIK - AINMK,OTHER THEVAR(DEVAR)PERSONALITIES....ALONG WITH IMPORTANT NATIONAL AND INTERNATIONAL NEWS AND HAPPENINGS.Website which link the Thevar community around the world
Saturday, January 14, 2012
பொங்கல்
பொங்கல் பூஜை எவ்வாறு செய்ய வேண்டும்?
பொங்கல் வைக்க உகந்த நேரம்: காலை 7.30 மணி முதல் காலை 9 மணிக்குள்; பொங்கல் வைத்து, பரப்பிரும்மத்தின் பிரத்யக்ஷ ஸ்வரூபமாக விளங்கும் சூரிய பகவானை வணங்குங்கள்!
பொங்கல் திருவிழா ஏன் கொண்டாடப்படுகிறது என்றால், பொங்கலுக்கு முதல் நாளான போகிப்பண்டிகையின் போது நம்மிடமுள்ள கெட்ட குணங்கம் போகின்றன.பொங்கல் பண்டிகையன்று நம்மிடம் நல்ல குணங்கள் பொங்கிப் பெருக ஆரம்பிக்கின்றன. மறுநாள் காணும் பொங்கல் எதிர்வரும் (காணும்) காலங்களில் நல்ல எண்ணங்கள் எங்கும் எதிலும் நீடித்து நிற்க இறைவன் அருள்புரிய கொண்டாடப்படுகிறது.
ஆரோக்கியம் தரும் ஆதித்தன்: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. உலகில் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் உடல் ஆரோக்கியம் இல்லாவிட்டால் செல்வத்தால் பயனில்லை. சுவரை வைத்துத் தானே சித்திரம் என்றும்கூட சொல்வதுண்டு. அதனால் மனிதவாழ்விற்கு மன, உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியம். இதற்குரிய தெய்வமாக சூரியன் இருக்கிறார். இவருக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் செந்தாமரை மலரிட்டு வணங்கினால் ஆரோக்கியம் உண்டாகும். கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யாதே என்பது சூரியனின் பெருமையை எதிர்மறையாகக் கூறுவதாகும். இப்பழமொழி கண் பெற்ற பயனே சூரியனைக் கண்டு மகிழ்வதற்கு என்று குறிப்பிடுகிறது.
பொங்கல் பூஜை செய்வது எப்படி?
இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ஸ்டவ்வில் பொங்கல் வைக்கிறார்கள். ஆனால், சூழ்நிலைகளைக்காரணம் காட்டி, நமது பாரம்பரியத்தை மறந்து போவது முறையானதல்ல. மேலும், இளைய தலைமுறையினர், அக்காலத்தில் நாம் எப்படி பொங்கலிட்டோம் என்பதையும் தெரிந்து கொண்டு எதிர்காலத்திலும் கடைபிடிக்க வேண்டும்.
வீட்டு வாசலில் பொங்கல் வைக்க வசதியில்லாவிட்டால், தெருமக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் இணைந்து பொங்கல் வைக்க வேண்டும். கோயில்களையும் தேர்ந்தெடுக்கலாம். பால் பொங்கும் போது, சூரிய நமஸ்காரம் செய்து, பொங்கலோ பொங்கல் என ஒரு சேர முழக்கமிட வேண்டும். ஏனெனில், இது ஒரு ஒற்றுமைத் திருவிழா. தேரோட்டம் என்ற நிகழ்ச்சியை ஊர் ஒற்றுமை கருதி எப்படி நம் முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தி சென்றார்களோ, அதுபோல பொங்கலும் மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்க்கும் விழா என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே வீட்டுக்குள் காஸ்ஸ்டவ், மண்ணெண்ணெய் அடுப்பு இவற்றில் பொங்கல் வைப்பதைத் தவிர்த்து வீதியில் வைக்க வேண்டும். நகரங்களாக இருந்தாலும் கூட, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்புஅளிக்கும் வகையில், அங்கிருந்து பனை ஓலை அல்லது தென்னை ஓலை தருவித்து பொங்கலிட வேண்டும்.
பொங்கலன்று காலையில் நல்ல நேரம் பார்த்து, வீட்டு முற்றத்தில் பெரிய அளவிலான குத்துவிளக்கேற்றி, அதன் முன் ஒரு வாழை இலையைப் போட வேண்டும். அதன் இடது ஓரத்தில் நாழி நிறைய பச்சை நெல் வைக்க வேண்டும். இலையில் பச்சரிசியை பரப்பி, அதன் மேல் கத்தரிக்காய், கருணைக்கிழங்கு, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, அவரைக்காய், சீனிஅவரை, பூசணித் துண்டு, பிடிகிழங்கு, காப்பரிசி (வெல்லம், பச்சரிசி கலவை) வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள்கிழங்கு ஆகியவற்றை வைக்க வேண்டும். கரும்பின் ஓலையை வெட்டாமல் நீள கரும்பாக சுவரில் சாய்த்து வைக்க வேண்டும். ஒற்றைக் கரும்பாக வைப்பதைத் தவிர்த்து இரண்டு கரும்புகள் வைக்க வேண்டும்.
பொங்கல் பானையை மண்அடுப்பு அல்லது பொங்கல் கட்டி எனப்படும் கற்கள் மீது வைக்க வேண்டும். திருவிளக்கிற்கு பத்தி, கற்பூர ஆரத்தி காட்டியபிறகு, உங்கள் குல தெய்வம் இருக்கும் கோயிலின் திசையை நோக்கி காட்ட வேண்டும். பின்னர் சூரியபகவானுக்கு ஆரத்தி காட்டியதும், ஒரு தேங்காயை உடைத்து, அதன் நீரை பானையில் விட வேண்டும்.
சுத்தப்படுத்திய பச்சரிசியை நன்றாகக் களைந்து, அந்த தண்ணீரை பானையில் விட வேண்டும். அடுப்புக்கும், பொங்கல் பானைக்கும் தூபம் (பத்தி) காட்டி, பற்ற வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்து பால் பொங்கும் போது குலவையிட வேண்டும். குலவை தெரியாதவர்கள் பொங்கலோ பொங்கல் என முழங்க வேண்டும். பின்னர் பானையிலுள்ள சுடும் நீரை, அரிசி வேகும்அளவிற்கு மட்டும் வைத்துக் கொண்டு, மீதியை முகந்து விட வேண்டும். அரிசியை போட்டு, வெந்ததும் அவ்வப்போது அகப்பையால் கிண்டி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், பாத்திரத்தின் அடியில் பிடித்து விட வாய்ப்புண்டு. பொங்கலை இறக்கிய பிறகு, சர்க்கரைப் பொங்கல் வைக்க வேண்டும்.
இலையின் முன்னால் இந்த பானைகளை இறக்கி வைத்து, திருவிளக்கிற்கும், சூரியனுக்கும் பூஜை செய்ய வேண்டும். ஆதித்ய ஹ்ருதயம் தெரிந்தவர்கள் அந்த ஸ்லோகங்களைச் சொல்லலாம். மற்றவர்கள் சூரியன் குறித்த தமிழ் பாடல்களைப் படிக்கலாம். பின்னர் காகத்திற்கு பொங்கல் வைக்க வேண்டும். காகம் உணவை எடுத்த பிறகு, குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் கொடுக்க வேண்டும். அதன்பிறகே பெரியவர்கள் சாப்பிட வேண்டும். பின், காய்கறி வகைகள் சமைத்து வெண்பொங்கலை மதிய வேளையில் சாப்பிட வேண்டும். இரவில் முன்னோரை நினைத்து, இனிப்பு வகைகள், புத்தாடை வைத்து வணங்க வேண்டும். புத்தாடையை தானமாக கொடுத்து விட வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment