16 வயதினிலே படம் ரீ-ரிலீசிற்கு தயாராகி உள்ளது. இதற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கமல், ரஜினி, பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில், ‘சுயமரியாதை ஜாஸ்தி இருந்தா ரொம்ப கஷ்டம்’ என்று ரஜினியும், ‘இப்படம் அனைவருக்கும் தன்னம்பிக்கையை கொடுக்கும்’ என்று கமலும் பேசியுள்ளனர். இந்த படம் 100 நாட்கள் ஓடவேண்டும். அதற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என நம்புகிறோம் என்றும் கூறியுள்ளனர்.
1977ம் ஆண்டு வெளிவந்த படம் 16 வயதினிலே. ஸ்டூடியோக்களில் வலம் வந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவை கிராமங்களின் தெருக்களில் நடமாட வைத்த முதல் படம். தமிழ் சினிமாவின் 75 ஆண்டுகால வரலாற்றில் இப்போதும் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் படம். அதனை இயக்கிய பாரதிராஜா, தயாரித்த எஸ்.ஏ.ராஜ் கண்ணு, இசை அமைத்த இளையராஜா, ஒளிப்பதிவு செய்த நிவாஸ், நடித்த கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, கவுண்டமணி ஆகியோர் இப்போதும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காந்திமதி மட்டும் சமீபத்தில் காலமானார்.
36 வருடம் கழி்த்து இந்தப் படம் இப்போது நவீன முறையில் டிஜிட்டல் மற்றும் சினிமாஸ்கோப் ஆக்கியிருக்கிறார்கள். நவீன ஒலிநுட்பத்தை பயன்படுத்தி பாடல்களை புதிதாக்கி இருக்கிறார்கள். இதன் பணிகள் முடிவடைந்து இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பாக்யராஜ், பார்த்திபன், கமல், ரஜினி, அந்த படத்தில் டாக்டர் வேடத்தில் நடித்த சத்யஜித், தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு, கமலா தியேட்டர் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
தன்னம்பிக்கைக்கு உதாரணம் இந்த படம் - பாக்யராஜ்
இந்த விழாவில் பாக்யராஜ் பேசும்போது, ‘‘தன்னம்பிக்கைக்கு உதாரணம் இந்த படம். இந்தபடம் அனைவருக்கும் ஒரு டிக்ஷனரி போல. என் குருநாதரிடம் வேலை பார்த்தது சந்தோஷத்தையும் பெருமையையும் தருகிறது என்றார்.
கேரக்டரின் வெற்றிக்கு காரணம் என நினைக்கும்போது பெருமைப்படுகிறேன் - சத்யஜித்
இந்த படத்தில் டாக்டராக நடித்துள்ளார் சத்யஜித். அவர் பேசும்போது, ‘இப்படம் வெளிவரும்போது நான் பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவன். எனக்கு அதிகமாக தமிழ் பேசத்தெரியாது இந்த டீமில் உள்ள எல்லாரும் எனக்கு ரொம்ப சப்போர்ட் செய்தார்கள். இந்த படம் வெளிவந்தபோது படத்தின் ஆடியன்ஸ் என்னை மிகவும் அசிங்கமாக திட்டினார்கள். ஆனால் நான் இதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆடியன்ஸ் என்னை திட்டும் அளவு படம் உள்ளது என்றால் அந்த கேரக்டர் வெற்றியடைந்ததாகத்தான் அர்த்தம். இந்த மேடையில் நான் அமர்ந்திருப்பதை பெருமையாக கருதுகிறேன்’ என்றார்.
இரண்டு மெட்டல் சேர்ந்துதான் தங்கம் உருவாகும் - பார்த்திபன்:
பார்த்திபன் பேசும்போது, இந்த விழா மேடைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளேன். இரண்டு மெட்டல் சேர்ந்துதான் தங்கம் உருவாகும் என சமீபத்தில் ஒரு புத்தகம் படித்தேன். அதுபோல் கமல், ரஜினி சேர்ந்து இருப்பது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த தங்கம். இந்த படம் ஒரு அபூர்வமான படம். சினிமா நூற்றாண்டு விழாவில் கமல் மலையாள நடிகர் மதுவின் காலைத்தொட்டு வணங்கினார். அதை நான் மிகப்பெரிய விஷயமாக கருதுகிறேன். அவர் தன்னை பெரிய ஆளாக காமித்துக்கொள்ளாமல் மரியாதை செலுத்தும் விதம், பணிவு ஆகியவற்றை போற்றுகிறேன். ரஜினியின் கோச்சடையான் படம் ரிலீஸ் ஆகப்போகிறது. கோச்சடையானுக்குப் பிறகு பரட்டை மாதிரி ஒரு ஜாலியான படம் பண்ணனும். சூப்பர் ஸ்டார் என்ற பெயர் அந்த லுங்கியில் ஒளிந்திருக்கும். ஒவ்வொரு பிரேமிலும் ரஜினி தெரிவார். எல்லோரையும் போல இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கனும்னு நானும் ஆசைப்படறேன்’ என்றார்.
சுயமரியாதை ஜாஸ்தி இருந்தா ரொம்ப கஷ்டம் - ரஜினி
36 வருடத்திற்கு பின் இந்தவிழா நடப்பது மிகவும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் கமலிடம்தான் மிகவும் நெருக்கமாக இருப்பார். என்னிடம் அவ்வளவு நெருக்கமாக இருந்தது இல்லை. என்னிடம் கால்ஷீட் கேட்ட நியாபகமும் இல்லை. கமல் விஸ்வரூபம் பட பிரச்னையினால் பாதிக்கப்பட்டிருந்தபோது, ‘புத்தம் புது பொலிவுடன் 16 வயதினிலே படத்தை ரீ-ரிலீஸ் பண்ணப்போறேன். அந்த படத்தை வெளியிட்டு அதில் வரும் பணத்தை கமலிடம் கொடுக்கப்போறேன்’ என்று தயாரிப்பாளர் ராஜ்கண்ணு சொன்னார். அவரே கஷ்டமான சூழ்நிலையில் இருக்காருன்னு கேள்விப்பட்டேன். இவரது இந்த பெருந்தன்மை என்னை பெரிய அளவில் பாதித்தது. அவரை நான் சந்திக்க ஆசைப்பட்டேன். சினிமால சுயமரியாதை ஜாஸ்தி இருந்தா ரொம்ப கஷ்டம். இவர் ரொம்ப சுயமரியாதை உள்ள மனிதர். அவரிடம் ‘‘இந்த படம் மீண்டும் ரிலீஸ் பண்ண போறீங்களே. அதில் வரும் பணம் யாருக்கு சேரும்’ என்று கேட்டதற்கு ‘எனக்குதான் வரும்’ என்று கூறினார். சினிமாவில் நல்ல காலம், கெட்ட காலம் எல்லாம் வரும், போகும். நான் இந்த விழாவிற்கு கண்டிப்பா வரேன் என்று சொல்லிதான் நானே இந்த விழாவிற்கு வந்தேன். இந்த பட தயாரிப்பாளர் ராஜ்கண்ணு மாதிரி இன்னும் பல தயாரிப்பாளர்கள் வரணும். இந்த படம் 100 நாள் ஓடணும். இப்படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுப்பார்கள் என்று எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கு’ என்றார்.
ரசிகர்கள் தங்க கிரீடமே வெச்சுட்டாங்க - கமல்
இந்த படத்தின் வெற்றி, தோல்வி எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா நடிகர்களின் ஒத்துழைப்பைக் கண்டுவியந்தேன். அது பரட்டையாகட்டும், சப்பாணியாகட்டும், ஒளிப்பதிவாளராகட்டும், இசையாகட்டும் அனைவருக்கும் இந்தப் படம் தன்னம்பிக்கையை கொடுக்கும். பாரதிராஜா மிக்க அனுபவம் மிக்கவர். 36 வருடத்திற்கு முன்பே இந்த படம் நல்லா ஓடிச்சு. ஏன் இந்த படத்திற்கு விழா எடுக்கலைன்னு இயக்குனரிடம் கோபப்பட்டேன். 36 வருடம் கழி்த்து இந்த விழா எடுப்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா, சில்லறைத்தனமா அன்னிக்கு கேள்வி கேட்டிருக்க மாட்டேன். 36 வருடத்திற்கு முன்னாடியே அதிநவீன இசை கொடுத்திருக்காங்க. பல தொழில்நுட்பத்தில் எடுத்த படம்.
இந்த படத்தை கிண்டலடித்தவர்களே அதிகம். வெற்றி பெறும் என்று சொன்னவர்கள் மிகக்குறைவு. பெரிய பட தயாரிப்பாளரிடம் படத்தைக் காண்பித்தேன். படம் ஓடாதுண்ணு சொல்லிட்டாரு. நம்ம கோவணம் அவுந்தா பரவாயில்லை. இதுல புரொட்யூசரு கோவணம் அவுந்திரக்கூடாதுன்னுபயம் இருந்துச்சு. ஆனா ரசிகர்கள் தங்க கிரீடமே வெச்சுட்டாங்க.
எங்களுக்கு இந்தமாதிரி விழாக்கள் புதிதல்ல. இந்த மாதிரி விழா நடக்கும்போது ஒரு படம் சில்வர் ஜுப்ளி விழா நடக்கும். மற்றொரு படத்தின் ஷுட்டிங்கில் நாங்கள் கலந்துகொள்வோம். ஆனால் இப்போதுதான் இரண்டு பேருமே ஸ்லோவாயிட்டோம். இதற்கு வயது காரணமல்ல. முதலீடு செய்பவர்கள் குறைவு. 16 வயதினிலே படத்தில் ரஜினிக்கு சில ஆயிரம்தான் சம்பளம் கிடைத்தது. பத்து வருடத்திற்கு பிறகும் ரஜினி அப்படித்தான் இருந்தார். இப்பவும் ரஜினி அப்படியேதான் இருக்காரு. நல்லவேளை; இடைத்தரகர்கள் பலர் இருந்தாலும் எங்கள் நட்பு அப்படியே இருக்கு. இதற்கான பெருமை எங்கள் இருவரையுமே சாரும். எங்களிடம் தன்னம்பிக்கை இருக்கு. நல்ல நண்பர்கள், நல்ல ரசிகர்கள் எல்லாரும் எங்களைச் சுற்றி இருக்கிறார்கள். எனக்கு தன்னம்பிக்கையும் ஊக்கசக்தியும் அதிகமாவே இருக்கு. இந்த மாதிரி தயாரிப்பாளர்கள் அன்னும் அதிக அளவில் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்’ என்றார்.
இன்றைக்கும் வற்றாத ஜீவநதி இளையராஜா - பாரதிராஜா
பாரதிராஜா பேசும்போது, ‘காலம் உருமாற்றம் செய்தாலும் உள்ளத்தால் அப்படியே இருக்கேன். இவங்க இரண்டு பேரும் தமிழ் சினிமாவின் பொக்கிஷங்கள். கமல் பிறக்கும்போதே ஒரு கலைஞனாகத்தான் பிறந்திருக்கான். அம்மாவும்நீயே அப்பாவும் நீயே பாடலின் எக்ஸ்பிரஷன் பார்த்தால் அனைவருக்கும் இது புரியும். நான் இந்த படத்தை என் கேர்ள் பிரண்டுடன் சேர்ந்து பார்த்தேன். என்ன மாதிரியான ஒரு அற்புத கலைஞனா வெளிப்படுத்தியிருக்கான். ரஜினி, நான் எல்லாம் வராண்டாவில் படுத்து தூங்குவோம். இதுவரை சினிமாவில் கமலுக்குத்தான் நான் அதிகம் சம்பளம் கொடுத்தேன். கமலுக்கு 27,000 ரூபாய் கொடுத்தேன். ரஜினியிடம் ஒரு ஆர்ட் பிலிம் பண்ணப்போறேன். நடிக்க முடியுமான்னு கேட்டதற்கு ரஜினி 5000 ரூபாய் சம்பளம் கேட்டார். என்னால் அவ்வளவு தரமுடியாது. 3000 ரூபாய் தரலாமா என்று கேட்டேன். அந்த தொகையை ஒத்துக்கொண்டு நடித்துக்கொடுத்தார். ஆனால் அதிலும் இன்னும் 500 ரூபாய் நான் தரவில்லை.
கமலிடம் இது பரட்டை கெட்டப். கோவணத்துடன் எல்லாம் நடிக்க வேண்டியிருக்கும் என்று சொன்னேன். உடனே செஞ்சாரு. அவரு அந்த கேரக்டராவே மாறி செஞ்சாரு. உலகத்துல இவரப்போல துணிச்சல் யாருக்குமே இல்லை. தொட்டிலில் என் பையன் இருக்கும்போது மிகையா அட்வான்ஸ் கொடுத்தவர் புரொட்யூசர். உரமாக இருந்தவர் ரஜினி, கமல், ஸ்ரீதேவி, இளையராஜா ஆகியோர். என்னால் என் முதல் பட வாய்ப்பை மறக்க முடியாது. ரத்தமும் சதையுமாக இருந்த என் நண்பன் இளையராஜா இங்கு வரல. படத்தை முழுசா பார்த்துட்டு நோட்ஸ் எடுத்தான். அப்படியே ஒரு புதிய சப்தம் கொண்ட இசையை வித்தியாசமாக கொடுத்தான். என்னுடன் பயணப்பட்ட பாமரன் அவன். இது அவனுடைய சொத்து. இந்த நேரத்தில் அவனை நினைத்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறேன். இன்றைக்கும் வற்றாத ஜீவநதி இளையராஜா.
ஸ்ரீதேவிபற்றி கூறும்போது, ‘மெல்லிய நுணுக்கங்களைக்கூட ரொம்ப அழகா செய்யறவங்க. மிகவும் திறமைசாலியாக நடித்துக்காட்டியவர்’ என்றார். பாக்யராஜ் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். இதுவரை என்னை குரு ஸ்தானத்தில் பார்த்திருக்கிறார். கலைஞானம், செல்வராஜ் போன்ற எழுத்தாளர்கள் என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள். இவர்களால் நான் வளர்ந்தேன். ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் இந்த படம் மிகச்சிறப்பாக வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.
16 வயதினிலே படம் ரீ-ரிலீசிலும் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment