தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக விளங்கும், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவடபத்ரசாயி கோயில் கோபுரத் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வருகிறது.
தமிழ்நாடு அரசு சின்னத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் இருக்கும் ஆண்டாள் கோயிலின் கோபுரம்தான் இடம் பெற்றுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைக்குக் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லாக விளங்குவது ஸ்ரீ வடபத்ரசாயி பெருமாளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 11 அடுக்குகளைக் கொண்ட கோபுரம் கொண்ட கோவில் ஆகும். இந்த கோவில் கோபுரம் 192 அடி உயரமானது. இக்கோவில் கோபுரமே தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சின்னம் ஆகும். இந்த சீர்மிகு கோவில் பெரியாழ்வார் என்னும் பெருமாளின் அடியாரால் கட்டப்பட்டது. ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையாகிய இவர், தனது மருமகனாகிய பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டினார் என்று கூறுவர். அவர்
பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றிகொண்டு, தாம் பெற்ற பொன்முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார் என்றும் நம்பப்படுகிறது.
2000-ம் ஆண்டில் இக் கோபுரத்திற்கு இறுதியாக திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இக் கோயில்களின் திருப்பணிகள் தொடங்கியது. இங்குள்ள உள்ள பெரியாழ்வார் சன்னதி, வடபத்ரசாயி கோயில்களில் தங்க கொடி மரம் அமைக்கும் பணி மற்றும் கோபுரம் புனரமைக்கும் பணிகள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. தற்போது சுமார் 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 2014 ஜனவரி மாதத்தில் இக் கோயிலுக்கான கும்பாபிஷேகம் நடைபெறும் என்று கோயில் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன் திங்கள்கிழமை கூறியதாவது: இக் கோபுரம் தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக உள்ளதால், கோபுரத் திருப்பணிக்கு ரூ.45 லட்சம் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.25 லட்சம் வரவேண்டியுள்ளது. கோபுரத்தை கிடுகு தட்டி கொண்டு மறைத்து வர்ணம் பூசும் பணி நடைபெற்றது. தற்போது கோயில் பாதுகாப்பு காரணங்களுக்காக கோபுரத்தை மறைத்துள்ள தட்டிகளை எடுக்கக் கூறிவிட்டார்கள். அதனால் கிடுகு தட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. வர்ணம் பூச அமைக்கப்பட்ட சாரம் இன்னும் அவிழ்க்கப்படவில்லை. கோபுரத்தின் கீழ் தட்டுப் பகுதியில் வேலைகள் உள்ளது. முதலில் இக் கோயிலின் கும்பாபிஷேகம் நடத்தப்படும். பின்னர் ஸ்ரீஆண்டாள் கோயிலின் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றார் அவர்.
No comments:
Post a Comment