கவிஞர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப்போர் நூல் அறிமுக விழா, மலேசியா நாட்டில் 4-ந்தேதியில் இருந்து 6-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. புவி வெப்பமயமாதல், உலகமயமாதல், இந்திய விவசாயிகளின் துயரம் என்ற பிரச்சினைகளை மையப்படுத்தி, கவிஞர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப்போர் என்ற புத்தகம், ஒரே ஆண்டுக்குள் 11 பதிப்புகள் வெளிவந்துள்ளன.
விவசாயம் பொய்த்துப்போனதால் குடும்பத்தலைவனை இழந்த 11 தமிழக விவசாய குடும்பங்களுக்கு இந்த நாவல் மூலம் கிடைத்த வருமானத்தில் 11 லட்சம் ரூபாயை, கவிஞர் வைரமுத்து ஏற்கனவே வழங்கி இருக்கிறார்.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நாவலின் அறிமுக விழாக்கள் தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் நடந்துள்ளன. பிரான்ஸ், சுவிட்சர்லாந்து:, நெதர்லாந்து, சிங்கப்பூர் உள்பட வெளிநாடுகளிலும் நடந்துள்ளன.
மூன்றாம் உலகப்போர் 11-வது பதிப்பின் அறிமுக விழாக்கள், மலேசியத்தலைநகர் கோலாலம்பூரில் வருகிற 4-ந்தேதியும், சிரம்பான் நகரில் 5-ந்தேதியும், பினாங்கு நகரில் 6-ந்தேதியும் நடக்கின்றன.
கோலாலம்பூர் விழாவில் மலேசிய முன்னாள் மந்திரி டத்தோ சாமிவேலு கலந்துகொள்கிறார். சிரம்பான் விழாவில் டத்தோ சகாதேவனும் கலந்துகொள்கிறார்கள். இந்த இரு விழாக்களையும் மலேசியா இந்தியா வர்த்தக சபை மற்றும் நெகிரி செம்பிலான் இந்திய சங்கங்களின் ஒருங்கிணைப்புப் பேரவையின் சார்பில் டத்தோ கனகராஜாராமன், டாக்டர் வீரப்பன், கன்னியப்பன் ஆகியோர் செய்துள்ளனர்.
பினாங்கில் நடைபெறும் விழா, மலேசியா இளைஞர் விளையாட்டுத்துறை துணை மந்திரி டத்தோ எம்.சரவணன் தலைமையில் நடக்கிறது. கண்ணதாசன் அறவாரியமும், பினாங்கு முத்தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்துகின்றன.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.ராஜேந்திரன், மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் பேசுகிறார்கள். மூன்று விழாக்களிலும் கவிஞர் வைரமுத்து கலந்துகொள்கிறார். இதற்காக, நாளை (புதன்கிழமை) கோலாலம்பூருக்கு புறப்பட்டுச் செல்கிறார். 7-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்.
No comments:
Post a Comment