பா.ஜ., நிர்வாகி சேலம் ஆடிட்டர் ரமேஷ், வேலூர் இந்து முன்னணி நிர்வாகி வெள்ளையப்பன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை பிலால்மாலிக்,29, "பா.ஜ.,வைச் சேர்ந்த வேலூர் டாக்டர் அரவிந்த்ரெட்டி, பரமக்குடி முருகனையும் நாங்கதான் முடிச்சோம்' என வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த ஜூலை 1ல், வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன், 19ம் தேதி பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இவ்வழக்கு தொடர்பாகவும், ஏப்.,17 பெங்களூரு பா.ஜ., அலுவலகம் அருகே குண்டுவெடித்த வழக்கிலும், ஜூன் 26ல், மதுரை நேதாஜி ரோடு பால்கடைக்காரர் சுரேஷ் கொலை வழக்கிலும், மதுரை நெல்பேட்டை "போலீஸ்' பக்ருதீன்,36, பிலால்மாலிக், நெல்லை மேலப்பாளையம் "பன்னா' இஸ்மாயில்,38, ஆகியோர் தலைமறைவாக இருந்தனர்.
இந்து அமைப்பின் நிர்வாகி ஒருவர், திருப்பதி பிரமோற்சவ விழாவிற்கு செல்ல முடிவு செய்திருந்தார். அவர் செல்லும் வழியை நோட்டமிடுவதற்காக பக்ருதீன் மட்டும் சென்னை வந்தபோது, போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்படி, திருத்தணி அருகேயுள்ள புத்தூரில் குடும்பத்துடன் பதுங்கியிருந்த பிலால்மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயிலை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். போலீஸ் பிடி இறுகுவதை அறிந்த பிலால்மாலிக், தனது மனைவி அசீனாபானு, மகன் முகமது ஹம்சா,4, மகள்கள் பாத்திமா,3, யாசின்,1, ஆகியோரை வீட்டில் இருந்து வெளியேற்றினார். பின், நீண்டபேச்சுவார்த்தைக்கு பின், பிலால்மாலிக்கும், பன்னா இஸ்மாயிலும் போலீசில் சரணடைந்தனர். இதில், போலீஸ் சுட்டதில் வயிற்றில் குண்டடிபட்ட பன்னா இஸ்மாயில், உடனடியாக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால், அவரிடம் போலீசார் விரிவாக விசாரிக்கமுடியவில்லை. அதேசமயம், பிலால்மாலிக்கிடம் விசாரித்தனர்.போலீசில் அவர் கூறியதாவது: இந்து மத தலைவர்களும், நிர்வாகிகளும் தொடர்ந்து குறிப்பிட்ட மதத்தினரை தாக்கி பேசி வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே, தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டோம். ஆடிட்டர் ரமேஷ், வெள்ளையப்பனை முடித்தது போல், வேலூர் பா.ஜ., நிர்வாகி டாக்டர் அரவிந்த்ரெட்டியையும், பரமக்குடி நிர்வாகி முருகனையும் நாங்கள்தான் முடித்தோம், என தெரிவித்துள்ளார்.
போலீசார் கூறியதாவது:டாக்டர் அரவிந்த்ரெட்டி, முருகன் கொலை வழக்கில் ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிலால்மாலிக்கின் வாக்குமூலம் அதிர்ச்சி அளிக்கிறது. இவ்விரு வழக்குகளையும் சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க உள்ளது. இவர்களே நேரடியாக ஈடுபட்டார்களா அல்லது கூலிப்படையை வைத்து செய்தார்களா என தொடர் விசாரணையில்தான் தெரியவரும், என்றனர்.
"பாகிஸ்தான் வாழ்க' பிலால் மாலிக் கோஷம் பிலால் மாலிக், போலீஸ் பாதுகாப்புடன், வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் வீட்டில், நேற்று மாலை, 3:30 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார். வரும், 18ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பிலால் மாலிக், வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பிலால் மாலிக் முகத்தை துணியால் மூடி, போலீசார் அழைத்துச் சென்றபோது, "பாகிஸ்தான் வாழ்க; ஜின்னா வாழ்க' என, கோஷமிட்டபடி அவர் வேனில் ஏறினார்.
No comments:
Post a Comment