Saturday, August 27, 2011

பேரறிவாளன்- சாந்தன்- முருகனின் கருணை மனு மீது 11 ஆண்டுகளாக நடந்த விவாதங்கள் என்ன?- தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற தமிழக வக்கீல்கள் டெல்லியில் முகாம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 3 பேரின் உயிரையும் காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் இதற்காக பல்வேறு போராட்டங்களை அமைதியான முறையில் நடத்தி வருகிறார்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இவர்கள் 3 பேரும் கடந்த 26-4-2000 அன்று ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். கடந்த 11 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த கருணை மனுக்கள் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்த 11 ஆண்டுகளாக கருணை மனுக்கள் மீது என்னென்ன விவரங்கள் நடத்தப்பட்டன. இதில் யாராவது தலையிட்டார்களா? என்பது குறித்து தகவல்களை அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வக்கீல் தடா சந்திரசேகர் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 7 (1) சட்டப்பிரிவுன் கீழ் அவசர மனு தாக்கல் செய்ய முடியும். இதன்படி கடந்த 11 ஆண்டுகளாக பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது மத்திய உள்துறை அமைச்சகம் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகையுடன் எந்த விதமான கடிதப்போக்குவரத்து நடைபெற்றது என்பது பற்றிய விவரங்களை கேட்டிருந்தோம்.

இதற்காக தமிழக வக்கீல்கள் 8 பேர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். கருணை மனு தொடர்பாக இதுநாள் வரை நடைபெற்ற விவாதங்கள் அனைத்தையும் தருவதாக உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் கூறியிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் இதனை தரமுடியாது என்று கூறிவிட்டனர். உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் அனுமதி வேண்டும் என்று கூறுகிறார்கள்.

நேற்று இரவு 3 பேரின் வக்கீல் என்ற முறையில் சிதம்பரத்தின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ்.சும் அனுப்பியுள்ளேன். இதுவரை எந்தவித பதிலும் இல்லை. அதற்காக காத்திருக்கிறோம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாங்கள் கேட்கும் தகவல்களை தெரிவிக்க உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு வக்கீல் தடா சந்திரசேகர் தெரிவித்தார்.

No comments: