சென்னை; அண்ணா சாலையில் உள்ள புதிய தலைமை செயலகமானது நவீன பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக செயல்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகமானது மிகவும் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டது. தி.மு.க. செய்த சாதனைகளில் ஒன்றாக கருதப்பட்டது. ஆனால் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், மீண்டும் கோட்டையில் தலைமை செயலகம் செயல்படும் என்று அறிவித்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலகோடி ரூபாய் செலவழித்து கட்டப்பட்ட தலைமைசெயலகத்தை ஏன் வீணாக்க வேண்டும் என்றும் கேள்வி எழுந்தது. புதிய தலைமை செயலகம் கட்டப்பட்ட போதிலும் அதன் பணிகள் முழுமையாக பூர்த்தியாகவில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறினார். அவசர கதியில்தான் சென்ற ஆட்சியில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது என்றும் அவர் கூறினார்.
தலைமை செயலகத்தின் கட்டுமானப்பணிகள் குறித்து ஆராய விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டது. சமச்சீர் கல்வி வழக்கில் வெற்றி பெற்ற தி.மு.க. அடுத்ததாக தலைமை செயலக வழக்கை கையில் எடுக்க திட்டமிட்டிருந்தது. விசாரணை கமிஷனை எதிர்த்து அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரணைக்கு ஏற்பது பற்றி பின்னர் தீர்ப்பு கூறப்படும் என தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா, புதிய தலைமை செயலகம் அமைப்பதற்காக கட்டப்பட்ட கட்டிடத்தின் `ஏ' பிளாக்கில் மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை அதாவது பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும். இந்த மருத்துவமனை, புதுடெல்லியிலுள்ள எய்ம்ஸ் (ஆல் இந்தியா மெடிக்கல் சயின்ஸ்) மருத்துவமனைக்கு இணையாக பல்வேறு மருத்துவ வசதிகளுடன் செயல்படும். தற்போது கட்டப்பட்டு வரும் `பி' பிளாக் கட்டிடத்தில் புதியதாக ஒரு அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்று தெரிவித்தார். இதன்மூலம் சர்ச்சைகளுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment