Monday, August 29, 2011

டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா ரசிகர் மன்ற தலைவர் மர்ம சாவு: கரூர் தி.மு.க. கவுன்சிலர் மீது பரபரப்பு புகார்

கரூர் பண்டரிநாதன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது29). இவர் டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா ரசிகர்மன்ற கரூர் மாவட்ட தலைவராக இருந்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள டிஜிட்டல் போர்டு தயாரிக்கும் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்த டிஜிட்டல் கம்பெனியின் உரிமையாளர் சீனிவாசன் (வயது30). இவர் கரூர் தி.மு.க. கவுன்சிலராகவும் உள்ளார். இந்த நிலையில் கவுன்சிலர் சீனிவாசன் நேற்று அந்த பகுதியில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஒரு கோவிலில் ஆடுவெட்டி விருந்து கொடுத்தார். இதில் அருண்குமார் மற்றும் அவருடன் பணிபுரியும் கார்த்தி, மதன், சசிகுமார், பிரசன்னா, லோகு உள்பட பலர்கலந்து கொண்டனர்.

பிறகு ஆற்றில் அவர்கள் குளித்தனர். அப்போது தண்ணீரில் மூழ்கி அருண்குமார் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அருண்குமாரின் பிணத்தை ஒரு வாகனத்தில் ஏற்றி கொண்டு வந்து அவரது வீட்டில் போட்டுவிட்டு மற்றவர்கள் சென்றுவிட்டனர். அருண்குமாரின் பிணத்தை பார்த்து அவரது தாய் கதறி அழுதார்.

தனது மகன் ஆற்றில் மூழ்கி சாகவில்லை. அவனது சாவில் மர்மம் உள்ளது. இதில் தி.மு.க. கவுன்சிலர் சீனிவாசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாக அவர் கூறினார். சீனிவாசனுக்கு தனது மகன் ரூ.1லட்சம் கடன் கொடுத்ததாகவும், அவர் கூறினார்.

இந்த நிலையில் அருண்குமார் எழுதிய ஒரு கடிதம் அவரது வீட்டில் இருந்து கண்டு எடுக்கப்பட்டது. கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முகவரியிட்ட அந்த கடிதத்தில் அருண்குமார் பல திடுக்கிடும் தகவல்களை எழுதி உள்ளார். சீனிவாசனுக்கு தான் கடன் கொடுத்ததாகவும் மேலும் அவரது தொழிலுக்கும், குடும்பத்துக்கும், பல வகையில் உதவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சீனிவாசனுக்கும் ஒரு தனியார் டி.வி. பெண் செய்தி வாசிப்பாளருக்கும் தொடர்பு இருந்ததாகவும் எழுதி உள்ளார். மேலும் தனக்கோ, தனது குடும்பத்துக்கோ, ஏதாவது நேர்ந்தால் அதற்கு சீனிவாசன்தான் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த கடிதத்தின் பின்புறம் தான் யார் யாருக்கு எவ்வளவு கடன் கொடுத்துள்ளேன் என்ற விவரத்தையும் எழுதி உள்ளார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கரூர் போலீசார் அங்கு சென்று அருண்குமார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர் சீனிவாசன், மதன் ஆகியோர் கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பிறகு சீனிவாசன் மட்டும் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

No comments: